For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜகவினர் மக்கள் சேவையே கடவுள் சேவை என்ற மந்திரத்தை பின்பற்றுபவர்கள்” - பிரதமர் மோடி உரை!

06:56 PM Jul 02, 2024 IST | Web Editor
“பாஜகவினர் மக்கள் சேவையே கடவுள் சேவை என்ற மந்திரத்தை பின்பற்றுபவர்கள்”   பிரதமர் மோடி உரை
Advertisement

பாஜகவின் 10 ஆண்டு கால சாதனையை பொதுமக்கள் பார்த்துள்ளதாகவும், மக்கள் சேவையே கடவுள் சேவை என்ற மந்திரத்தை பின்பற்றி ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்டதை பொதுமக்கள் பார்த்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில்,  கடந்த 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டு கூட்டத் தொடரிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து நேற்று (ஜூலை 1) குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது இந்து, நீட் தேர்வு, முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்நிலையில், ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று (ஜூலை 2) மக்களவையில் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 4 மணி அளவில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.

அப்போது மோடி பேசத் தொடங்கியதும் பாஜக எம்.பிக்கள் மோடி, மோடி என முழக்கமிட்டனர். உடனே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு கடும் அமளியில் ஈடுபட்டுனர். உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி,

“குடியரசுத் தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது குடியரசுத் தலைவர் தனது உரையில் வளர்ந்த இந்தியாவின் தீர்மானத்தை விரிவுபடுத்தியுள்ளார். அவர் முக்கியமான பிரச்னைகளை எழுப்பியுள்ளார். அவர் நம் அனைவருக்கும், நாட்டுக்கும் வழிகாட்டியுள்ளார். அதற்காக குடியரசுத் தலைவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகிலேயே மிகப்பெரிய தேர்தலை வெற்றிகரமாக நடத்தி நமது நாடு உலகுக்குக் காட்டியுள்ளது. உலகின் மிகப் பெரிய தேர்தல் பிரசாரத்தில் நாட்டு மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தொடர்ந்து பொய்களை பரப்பியும் கூட கடும் தோல்வியை சந்திக்க நேரிட்டதால் சிலர் அடைந்துள்ள வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உலகின் மிகப் பெரிய தேர்தல் பிரச்சாரத்தில் மூன்றாவது முறையாக நாட்டுக்கு சேவை செய்ய நாட்டு மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். இது ஜனநாயக உலகுக்கு மிகவும் முக்கியமான மற்றும் பெருமையான நிகழ்வாகும்.

ஒவ்வொரு சோதனையிலும் எங்களை சோதித்த பிறகே நாட்டு மக்கள் எங்களுக்கு இந்த ஆணையை வழங்கியுள்ளனர். எங்களின் 10 ஆண்டு கால சாதனையை பொதுமக்கள் பார்த்துள்ளனர். மக்கள் சேவையே கடவுள் சேவை என்ற மந்திரத்தை பின்பற்றி ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்டதை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

2014-ல் நாங்கள் முதல்முறையாக வெற்றி பெற்றபோது, ​​ஊழலைப் பொறுக்கமாட்டோம் என்று தேர்தல் பிரச்சாரத்திலும் தெரிவித்திருந்தோம். எங்களின் ஒரே நோக்கம் 'முதல் தேசம்' என்பதே. எங்கள் பணிகள், படிகள் மற்றும் கொள்கைகள் இந்த நோக்கம் மற்றும் இலக்கை நோக்கியே உள்ளன. நாட்டின் நலனுக்காக தேவையான ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் நாங்கள் செய்துள்ளோம் என்பதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். ஊழலுக்கு எதிரான எங்கள் கொள்கை காரணமாகத்தான் நாடு எங்களை ஆசிர்வதித்துள்ளது.

இந்திய மக்கள் எவ்வளவு முதிர்ச்சியடைந்தவர்கள் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது. இத்தேர்தலில் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்ற பெரிய உறுதியுடன் பொதுமக்கள் மத்தியில் சென்றிருந்தோம். வளர்ந்த இந்தியாவுக்கான எங்கள் உறுதிப்பாட்டுக்காக நாங்கள் ஆசிகளை நாடியிருந்தோம். வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அர்ப்பணிப்புடனும், நல்லெண்ணத்துடனும், சாமானியர்களின் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பொதுமக்கள் மத்தியில் சென்றோம்.

இன்று, உங்கள் மூலம், முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும், வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். வளர்ந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்ற நமது நேரத்தின் ஒவ்வொரு நொடியையும், நமது உடலின் ஒவ்வொரு துகளையும் அர்ப்பணிப்போம். வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பும் தீர்மானத்தை நிறைவேற்ற எந்த ஒரு வாய்ப்பையும் விடமாட்டோம் என்று எனது நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். 2047-க்கு 24×7 வேலை செய்வதாக உறுதியளித்துள்ளோம்!

2014-ம் ஆண்டில், நாட்டு மக்கள் சேவை செய்வதற்காக எங்களைத் தேர்ந்தெடுத்தனர். அந்த தருணம் நாட்டின் மாற்றத்துக்கான சகாப்தத்தின் தொடக்கமாகும். இன்று எனது அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றுள்ளது. ஆனால், அனைத்து சாதனைகளுக்கும் வலு சேர்த்த ஒரு சாதனை, நாடு விரக்தி எனும் பள்ளத்தில் இருந்து வெளியே வந்து நம்பிக்கையுடன் காட்சி அளிக்கிறது.

2014-க்கு முன், பயங்கரவாதிகள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக தாக்குதல் நடத்த முடிந்தது. அப்பாவி மக்கள் உயிரிழப்பது வாடிக்கையாக இருந்தது. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அரசுகள் வாய் மூடி மவுனிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஆனால் 2014-க்கு பிறகு இந்த புதிய இந்தியாவுக்குள் நுழைந்தால் உயிருடன் திரும்ப முடியாது என்ற நிலை உருவானது. இந்தியா தனது பாதுகாப்புக்காக எதையும் செய்யும் என்பதை இன்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்கிறார்.

வாக்கு வங்கி அரசியல் காரணமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை ஆட்சியாளர்கள் வணங்கிக் கொண்டிருந்தனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் நுழைய முடியாத நிலையை அதன்மூலம் உருவாக்கினர். 370 சகாப்தத்தில், ராணுவத்தின் மீது கற்கள் வீசப்பட்டன. மக்கள் விரக்தியில் இருந்தனர். இப்போது அதுபோன்ற சம்பவங்கள் ஜம்மு காஷ்மீரில் நடக்க முடியாது. இன்று சட்டப்பிரிவு 370-ன் சுவர் இடிந்து விழுந்து, கல் வீச்சு நிறுத்தப்பட்டு, ஜனநாயகம் வலுப்பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களிக்க முன்வருகின்றனர்”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement