For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக வெற்றி" - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

10:36 AM Aug 04, 2024 IST | Web Editor
 வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக வெற்றி    காங்கிரஸ் குற்றச்சாட்டு
Advertisement

மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சந்தீப் தீக்ஷித் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. 'வோட் பார் டெமாக்ரசி' என்ற அமைப்பின் ஆய்வறிக்கையின் படி, தலைமைத் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலில் கூறியதற்கும், பின்னர் அளித்த இறுதி புள்ளிவிவரங்களுக்கும் இடையே சராசரியாக 4.7% வித்தியாசம் உள்ளது.

இது தேசிய அளவில் சுமார் 5 கோடி வாக்குகளாகும். இந்த விவகாரம் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. 'வோட் பார் டெமாக்ரசி' என்ற அமைப்பு பாஜக வெற்றி பெற்ற 79 தொகுதிகளை குறிப்பாக அடையாளம் கண்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் கால தாமதம் எடுத்துக்கொண்டது. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.  கடந்த மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவின் ஆரம்ப மற்றும் இறுதி தரவுகளில் ஒரு சதவீத வித்தியாசம் மட்டுமே இருந்தது. எனவே, இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்" இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் கூறினார்.

Tags :
Advertisement