“பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்” - தேர்தல் வியூக கணிப்பாளர் பிரசாந்த் கிஷோர்!
“2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கடந்த ஆண்டை போல 303 அல்லது சற்று அதிகமான இடங்களை கைப்பற்றி பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்” என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. இதில் மொத்தம் 485 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனுடன் 18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் இத்தேர்தலில் பாஜக 303 அல்லது அதற்கு சற்று அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றும் என தேர்தல் வியூக கணிப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இன்று 6 மணியுடன் தேர்தல் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை செய்தி நிறுவனங்கள் வெளியிட உள்ளன. இந்நிலையில் அதற்கு முன்னரே தனது கருத்தை பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
“எனது கருத்துப்படி, அதே எண்ணிக்கையுடனோ அல்லது சற்று சிறப்பான எண்ணிக்கையுடனோ மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மேற்கு மற்றும் வட இந்தியாவில் மாற்றம் ஏதும் இல்லை. இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கில் போதுமான ஆதரவை பாஜக கூட்டணி பெற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.