"பாஜக 2025-க்குள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்!" -தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!
பாஜக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்புவதாகவும், இதற்காகவே மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றிபெற அக்கட்சி முயற்சிப்பதாகவும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 19 ஆம் தேதி முதல்கட்டமாக 21 மாநிலங்களின் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து நாளை (ஏப். 26) இரண்டாம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களின் 89 தொகுதிகளில் நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்! – இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவு!
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பேரணியின் போது, இடஒதுக்கீடு குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கடுமையாகத் தாக்கிய பிரதமர் நரேந்திர மோடி, “தெலங்கானா காங்கிரஸ் முதலமைச்சர் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்வார். எஸ்சி/எஸ்டிகள்/ஓபிசிக்களிடம் இருந்து இடஒதுக்கீட்டைப் பறித்து அதன் சிறப்பு வாக்கு வங்கிக்கு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள ஓபிசி சமூகத்தினருக்கு எச்சரிக்கை மணி” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ரேவந்த் ரெட்டி கூறியதாவது :
"பாஜக தனது சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ்-சின் நூற்றாண்டு வருடமான 2025-க்குள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர். இடஒதுக்கீடு குறித்து பலமுறை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை முன்மொழிந்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதை பாஜக முன்பு நிறுத்தியது.
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் எண்ணிக்கையைப் பெறுவதற்காக மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை வெல்ல வேண்டும் என சொல்லி வருகின்றனர். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முயற்சிக்கும் பாஜகவை சிலர் ஆதரிக்கின்றனர். இந்த தேர்தல் எஸ்சி, எஸ்டி, பிசி இடஒதுக்கீடுகளுக்கான வாக்கெடுப்பு" இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.