"டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி... எம்.எல்.ஏ-க்களிடம் ரூ.25 கோடி வரை பேரம்..." - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!!
டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாகவும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் ரூ.25 கோடி வரை பேரம் பேசி வருவதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று அமைந்த மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்தன.
இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
"என்னை கைது செய்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தன்வசம் இழுத்து ஆட்சியை கலைக்க பாஜக திட்டம் தீட்டியது. ஆனால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பாஜகவின் தூதையும், ரூ.25 கோடி பணத்தையும் நிராகரித்துள்ளனர். கடந்த ஒன்பது ஆண்டுகளில், எங்கள் அரசைக் கவிழ்க்க அவர்கள் பல சதிகளை தீட்டினர். ஆனால் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்: ராமரிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி..! – திருச்சியில் திருமாவளவன் எம்.பி. விமர்சனம்
கடவுளும் மக்களும் எப்போதும் எங்களை ஆதரித்தனர். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வலுவாக ஒன்றாக உள்ளனர். டெல்லி மக்களுக்காக நமது அரசு எவ்வளவு பணிகளை செய்துள்ளது என்பது இவர்களுக்கு தெரியும். பாஜக உருவாக்கிய பல்வேறு தடைகள் இருந்த போதிலும், நாங்கள் எவ்வளவோ சாதித்துள்ளோம்.
டெல்லி மக்கள் ஆம் ஆத்மியை பெரிதும் நேசிக்கின்றனர். எனவே, தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்துள்ளனர். எனவே போலி மதுபான ஊழல் என்ற குற்றச்சாட்டில் என்னை கைது செய்து அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள். இந்த முறையும் பாஜக தோல்வியடைவார்கள்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.