புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்!
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையமானது, பீகாரில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தம் நடத்தியது. ஆனால் அந்த தீவிர திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது என்றும் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வாக்குரிமை யாத்திரை தொடங்கியுள்ளார்.
இந்த யாத்திரையின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாய் ஹீராபென் மோடியை தவறாக பேசிப்பட்டதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக பேசியதாக காங்கிரஸ் கட்சியினரை கண்டித்தும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் புதுச்சேரியில் பாஜகவினர் காங்கிரஸ் கட்சி அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
புதுச்சேரி பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் அமைச்சர் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், சாய் சரவணன்குமார், செல்வம், தீப்பாய்ந்தான் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட பாஜகவினர் பேரணியாக சென்று வைச்சியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது அண்ணா சாலை - அம்பலத்தடையார் மடம் வீதி சந்திப்பில் வந்த அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர், தொடர்ந்து அங்கேயே ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு
ஏற்பட்டது.