நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி - “PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது!”
பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்ற நிதியமைச்சர் சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை பாஜக பெற்றது. தேர்தல் பத்திர திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “தேர்தல் நிதிப் பத்திரம் என்பது சட்டவிரோதமானது, உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்ததும் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது நமக்குத் தெரியும். தேர்தல் பத்திரத்தை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் அவர்கள் தங்கள் கொள்ளையைத் தொடர விரும்புகிறார்கள்.
பாஜகவினர் வெற்றி பெற்று தேர்தல் பத்திர திட்டத்தை மீட்டெடுத்தால், இந்த முறை எவ்வளவு கொள்ளையடிப்பார்களோ? இது எங்கள் வாழ்நாளில் மிக முக்கியமான தேர்தல். அதிர்ஷ்டவசமாக, இந்த ஊழல் படையான பாஜக ஆட்சியை விட்டு வெளியேறும் பாதையில் உள்ளது என்பதை தேர்தல் கள நிலவரங்கள் தெளிவுபடுத்துகின்றன” என தெரிவித்துள்ளார்.