“சிபிஐ, அமலாக்க துறை மூலம் பாஜக மிரட்டுகிறது”- அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!
“சிபிஐ மற்றும் அமலாக்க துறை மூலம் பாஜக என்னை மிரட்டுகிறது” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகாரின் விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அமலாக்கத் துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு, அவர் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த பதிவுகள் டெல்லியில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனையொட்டி, அவரது வீட்டு முன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளகளிடம் பேசிய அவர்,
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை மூலம் பாஜக என்னை மிரட்டுகிறது. பாஜக என்னை கைது செய்ய விரும்புகிறது. மனீஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின், சஞ்சய் சிங் ஆகியோர் பாஜகவை எதிர்த்தார்கள். அதனால் தான், அவர்கள் தற்பொழுது சிறையில் இருக்கிறார்கள். பாஜகவில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஊழல் செய்த மற்ற தலைவர்கள் பாஜகவில் இருந்தால் விசாரணை வளையத்தில் இருக்க மாட்டார்கள்.
நான் என்னை முழுமையாக நாட்டிற்காக ஒப்பு கொடுத்து விட்டேன். எனது ஒவ்வொரு மூச்சும் எனது நாட்டிற்காக தான் இருக்கிறது. எனது மிகப்பெரிய சொத்து எனது நேர்மை தான். அமலாக்கத்துறை தவறுதலாக எனக்கு சம்மன் அனுப்புகிறார்கள். பாஜக உடைய குறிக்கோள் என்னை விசாரணை செய்ய வேண்டும் என்பதல்ல நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் நான் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.
இவ்வாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.