“கள்ளச்சாராய விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது” - முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி குற்றச்சாட்டு!
“கள்ளச்சாராய விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது” என புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“நீட் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒட்டுமொத்த மோடி ஆட்சியில் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த மூன்றாவது முறையும், பழைய ஊழல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கள்ளச்சாராயம் எங்கிருந்து வந்தது? மெத்தனால் கள்ளக்குறிச்சி சாராய வியாபாரிகளுக்கு எங்கிருந்து கிடைத்தது? என சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதற்கு முன் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு நடக்காதது போல பேசி வருகின்றனர்.
கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்திற்கு புதுச்சேரிக்கு தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரியில் கள்ளச்சாராயம் விற்பதற்கு வாய்ப்பில்லை என கூறுகிறார். ஆனால் இன்று புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் கள்ளச்சாராய விற்பனை கண்டுபிடிக்கப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயத்தால் மற்ற மாநிலங்களை விட புதுச்சேரி மாநிலத்தில் இளம் விதவைகள் அதிகம் உள்ளனர். புதுச்சேரியில் சாராயத்தால் கண்ணுக்கு தெரியாமல் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. புதுச்சேரி அரசு ஏன் சாராயக்கடைகளை மூடக்கூடாது. சாராய கடைகள் மூலம் புதுச்சேரி அரசு மக்களை கொல்லக்கூடாது.
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பணிகளுக்காக நடைபெற உள்ள நேரடி நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற உள்ளது. கள்ளச்சாராயத்தின் புகலிடமே புதுச்சேரி மாநிலம்தான். புதுச்சேரியில் தொழிற்சாலைகள் மெத்தனால் பயன்படுத்துவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, அதனை தமிழகத்தில் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு கடத்தப்படுகிறது” என கூறியுள்ளார்.