“தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது” - தொகுதி மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு!
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் மக்களவை தொகுதிகளைக் குறைக்கும் வகையில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை நடத்த திட்டமிட்டிருந்தது பாஜக. அந்த சதியை தொடக்கத்திலே தடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மார்ச் 5 ஆம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் .
முதலமைச்சரின் முன்னெடுப்பு நாடு முழுமைக்கும் கவனத்தை பெற்றிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஆதரவு குரல்கள் ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றன. மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை வரையறுத்து தென்னிந்திய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்க பாஜக போட்டத் திட்டம் அம்பலமான நிலையில் கடந்த 25 ஆம் தேதி கோவைக்கு வந்த மத்திய உள்துறை அமித்ஷா தொகுதி மறுசீரமைப்பினால் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட குறைக்கப்படாது என்றும் Pro-Rata அடிப்படையில் தொகுதிகள் வரையறுக்கப்படும் என்றார்.
அமைச்சரின் பேச்சு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியது. அவர் குறிப்பிட்ட Pro-rata எனும் விகிதாச்சாரம் எதன் அடிப்படையிலானது? மக்கள் தொகை அடிப்படையிலானதா? தற்போதுள்ள தொகுதிகளின் அடிப்படையிலானதா? எனும் குழப்பம் இருந்தது. இதனை குறித்து திமுக கேள்வி எழுப்பியிருந்தது. ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர், உள்துறை அமைச்சர் கூறிய கருத்துக்களை தெளிவாக புரிந்துக் கொண்டதைப் போல தமிழ்நாட்டிற்கு எந்த இடமும் குறைக்கப்படாது என ஊடகங்களில் அடித்துக் கூறிவந்தார்.
ஆங்கில ஊடகத்திற்கு பாஜக மாநில தலைவர் அளித்துள்ள நேர்காணல் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே அவர் பொய் சொல்லி வருவது அம்பலமாகியிருக்கிறது. Pro-rata என்றால் என்ன பொருள்? வட இந்திய மாநிலங்களுக்கு விகிதாசாரத்திற்கு அதிகமான இடங்கள் கிடைக்குமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு தன்னால் ஒரு மாநில தலைவராக இதனை தெளிவுப்படுத்த முடியாது என்றும் நேரம் வரும் போது உள்துறை அமைச்சரும் பிரதமரும் விளக்கப்படுத்துவார்கள் அதுவரை காத்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
மேலும் அதை அரசாங்கம்தான் விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். Pro -Rata குறித்து தனக்கே புரிதல் இல்லாத போது மீடியாக்களில் ஏன் உளறி வந்தார்? மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் சதியில் பாஜக உறுதியாக இருக்கிறது என்பதைத்தான் இத்தகைய இரட்டை வேடம் காட்டுகிறது. இது போன்ற பொய்களை கூறி தமிழ்நாட்டை ஏமாற்றிவிட முடியாது. தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்தும் வரை முதலமைச்சரின் தலைமையில் உரிமைப் போராட்டம் தொடரும்”
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.