For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

சென்னை, தேனாம்பேட்டையில் மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
12:51 PM May 02, 2025 IST | Web Editor
மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம்   செல்வப்பெருந்தகை அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,

Advertisement

"கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அரசமைப்புச் சட்ட நூலை கையில் ஏந்தி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம், இடஒதுக்கீட்டிற்கு 50 சதவிகித வரம்பு விதித்திருக்கிற அரசமைப்புச் சட்டத்தை திருத்துவோம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த தேர்தல் பரப்புரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கையை அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக பிரதமர் மோடி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று வெறும் கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது.

2021 இல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பையே நடத்தாத ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ரூபாய் 8830 கோடி தேவைப்படுகிற நிலையில் 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் ரூபாய் 574 கோடி ஒதுக்கியிருக்கிறது. இதனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பாஜகவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா என்கிற கேள்விக்குறி எழுப்பப்பட்டது.

2025-26 ஆம் ஆண்டில் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பாஜக இந்த உத்தியை கையாண்டிருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் தேர்தல் பரப்புரையின் போது, ராகுல்காந்தி கோரிய சாதி வாரி கணக்கெடுப்பை கிண்டலும், கேலியுமாக பேசியவர் நரேந்திர மோடி. இந்தியாவில் மொத்தம் நான்கு சாதிகள் தான் இருப்பதாக கூறியதோடு, நகரம் சார்ந்த நக்சல் சிந்தனை என்று நையாண்டி செய்தார். அதுமட்டுல்ல, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த இடஒதுக்கீட்டு முறையை மீண்டும் விவாதித்து பரிசீலிக்க வேண்டுமென்று கூறியதை எவரும் மறந்திட இயலாது.

அதுமட்டுமல்லாமல், சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக மோடி குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் மக்களவையில் 400 இடங்கள் பாஜகவுக்கு மக்கள் வழங்கினால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி, புதிய அரசமைப்புச் சட்டத்தை தயாரிப்போம் என்று பாஜகவினர் தேர்தல் பரப்புரையின் போது கூறினார்கள். சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை கலந்தாலோசித்து அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசமைப்புச் சட்டத்திற்கு மோடி ஆட்சி மீண்டும் வந்தால் ஆபத்து ஏற்படும் என்று கருதிய தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் பாஜகவுக்கு 2024 தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் பாடத்தை புகட்டினார்கள்.

இதன் காரணமாக அரசமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட்டிருந்தாலும், நாடாளுமன்றத்தில் மிருகபல மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்து மக்களின் உரிமைகளை பறித்து வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்துவதற்காகத் தான் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய பரப்புரை மேற்கொண்டு வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகிற வகையில் நாடு தழுவிய பரப்புரை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, வருகிற மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் எனது தலைமையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர், எம். கிருஷ்ணசாமி, கே.எஸ். அழகிரி உள்ளிட்ட தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள்.

இக்கூட்டம் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. தமிழகத்தில் மே 4 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிற அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகிற பரப்புரை கூட்டத்திற்கு பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் அணி திரண்டு வருகை புரிய வேண்டுமென அன்போடு அழைக்கிறேன். தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்ற பல கூட்டங்கள் தமிழக அரசியல் வரலாற்றை மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் திருப்புமுனைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் எனது தலைமையில் நடைபெறுகிற எழுச்சிமிக்க காங்கிரஸ் மாநாட்டில் ஆயிரக்கணக்கில் வருகை புரியும் உங்களை ஆவலோடு சந்திக்க காத்திருக்கிறேன்.

அன்றைய தினம் காங்கிரஸ் தலைவர்கள் ஆற்றுகிற உரை தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இளந்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் உரிமைக் குரலாக ஒலிக்க இருக்கிறது என்பதையும் கூற விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி வலிமைமிக்கது என்பதை காட்டுவதன் மூலமே தமிழக காங்கிரசுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்பதை உறுதிபடுத்த மே 4 ஆம் தேதி உங்களை ஆவலுடன் சந்திக்கிறேன். அனைவரும் வருக. அணி அணியாய் வருக என அன்போடு அழைக்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement