சென்னையில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!
சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலணியில் வசித்து வருபவர் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் ரெட்டி. இவர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார், இவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் சென்னை புரசைவாக்கம் பகுதியில் மோகன்லால் காத்ரி என்பவர் இல்லத்திலும் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இவர் மொத்த தங்க நகை வியாபாரியாக இருக்கும் நிலையில் சவுகார்பேட்டை பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார். மேலும் இவருக்கு தொடர்புடைய சில இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும், புகாரின் பேரிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் முழுமையான சோதனைக்கு பின் அமலாக்கத்துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
காலை முதல் சென்னையில் தொழிலதிபர் மற்றும் நகை வியாபாரிக்கு தொடர்புடைய 5-க்கும் மேற்பட்ட இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.