#Bengaluru கட்டட விபத்து… அதிரடியில் இறங்கிய போலீசார்!
பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளரின் மகன் மோகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (அக்.22) பெங்களூரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹோரமாவு அகாரா என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டடம் திடீரென முழுமையாக இடிந்து விழுந்தது. இதில் அந்த கட்டிடத்திற்குள் வேலை பார்த்து வந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் போலுசாருக்கு தகவல் அளித்தனர்.
இதன் பேரில் ஹெண்ணூர் போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கு மீட்பு பணிகள் தொடங்கியது. இதில் 6 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உள்ளே சிக்கியிருந்த 14 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதற்கிடையே, அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது. இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சட்டவிரோத செயல்கள் நடந்திருக்கிறது. உரிமையாளர், ஒப்பந்தக்காரர் மற்றும் தொடர்புடைய அனைவர்களது மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு முழுவதும் இது போன்ற செயல்களுக்கு எதிராக ஒரு முடிவு எடுப்போம். சட்டவிரோதமான அனைத்து கட்டுமான தொழில்களும் உடனடியாக நிறுத்தப்படும். ஒப்பந்தகாரர்கள், என்னுடைய அதிகாரிகள், நிலத்தின் உரிமையாளர்கள் கூட என அனைவரும் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்" இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில், கட்டட உரிமையாளரின் மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கட்டட உரிமையாளர் முனிராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுற்றுசுவர் அமைக்க அதிகளவு குழி தோண்டிய நிலையில், கனமழையால் அதில் நீர் தேங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.