கோவையில் சீனியர் மாணவரை தாக்கிய 6 மாணவர்கள் கைது!
நேரு இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி வளாகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த எம்.ஏ கிரிமினாலஜி படிக்கும் சீனியர் மாணவரை, பொறியியல் படிக்கும் ஜூனியர் மாணவர்கள் 13 பேர் தாக்கினர். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், கல்லூரி நிர்வாகம் சீனியர் மாணவர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களை சஸ்பெண்ட் செய்தது. மேலும் கந்தேகவுண்டன் சாவடி காவல் நிலையத்தில் புகாரும் அளித்தது.
தொடர்ந்து நேற்று விசாரணைக்காக பெற்றோருடன் கல்லூரியில் ஆஜராக வேண்டும் எனவும் மாணவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் கல்லூரி விசாரணை குழுவை சேர்ந்த ஆசிரியர்கள் விசாரணை நடத்தினர்.
கல்லூரி விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை அளித்த பின்னர், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்திருந்தது. அதன்படி கல்லூரி விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, ஜூனியர் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து திருச்செல்வம், சாம் ஜான்பால், ஈஸ்வர் உள்ளிட்ட 18 வயது நிரம்பிய மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மாணவர்களில் 18 வயது நிரம்பாத மூன்று மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் மீது 191(2), 296(b), 115(2), 118(1), 351(3) BNS உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.