தனித்து விடப்பட்ட வேளச்சேரி - மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா!
மிக்ஜாம் புயலின் காரணமாக பள்ளிக்கரணை ஏரி உடைந்துள்ளதால் வேளச்சேரி தனித்துவிடப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா ஈடுபட்டு வருகிறார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே இன்று மிக்ஜாம் புயல் கரையை கடக்கிறது.
தற்போது மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு 80 கி மீ வடக்கு -வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது இன்று ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மச்சிலிபட்டணத்திற்கும் இடையே, பாபட்லாவிற்கு அருகே, கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வேளச்சேரி டான்சி நகர், விஜயா நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களில் உள்ள குடியிருப்பு வாசிகளை படகுகள் மூலம் மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளதாவது...
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேல் பெய்த கன மழையின் காரணமாக பள்ளமான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை வேளச்சேரி டான்சி நகர், விஜயா நகர், ராம் நகர், ஏ ஜி எஸ் காலனி, என் ஜி ஓ காலனி, வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்கு மேல் மழைநீர் தேங்கி உள்ளது.
தொடர்ந்து மழை பெய்ததால் வேளச்சேரி ஏரி அதன் கொள்ளவை விட அதிகம் நிரம்பியதால் ஏரி நீர் குடியிருப்பு பகுதிகளில் ஏற்கனவே தேங்கியுள்ள மழை நீருடன் சேர்ந்து நீர் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில பகுதிகளில் கழிவு நீரும் கலந்து உள்ளது, நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு படகுகள் மூலம் பால், பிரட் , உணவு உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம்.
மின்சாரம் இல்லாததாலும், மழை நீர் தேங்கி இருப்பதாலும் தொலை தொடர்பு சாதனங்களை செயல்படுத்த உயர் கோபுரங்களுக்கு டீசல் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. அடுத்தடுத்து நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ” என வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா தெரிவித்துள்ளார்.