அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: பஞ்சாப் முதலமைச்சர் தலைமையில் டெல்லியில் உண்ணாவிரத போராட்டம்!
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, கடந்த மார்ச் 21-ம் தேதி ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளன. மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகள், மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் புதிய நெருக்கடிகளை சந்திப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன.
இதனிடையே நேற்று முன்தினம் (மார்ச் 31) இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா, விசிக தலைவர் திருமாவளவன், அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் பிற இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட அமலாக்கத்துறை காவல் நேற்றுடன் (ஏப். 1) நிறைவடைந்த நிலையில், அவருக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பதவியில் இருக்கும் முதலமைச்சர் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல்முறை. முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்றும், சிறையில் இருந்த படியே பணிகளை செய்வேன் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் இன்று (ஏப். 7) உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தார். அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் பஞ்சாப் முதல்வர் பகவத்மான் சிங் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் ஆம் ஆத்மியின் கட்சி முக்கிய தலைவர்கள் தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.