For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம்.. நீண்ட காலம் அவரை சிறையில் அடைக்க முடியாது” - சுனிதா கெஜ்ரிவால் பேச்சு!

06:10 PM Mar 31, 2024 IST | Web Editor
“அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம்   நீண்ட காலம் அவரை சிறையில் அடைக்க முடியாது”   சுனிதா கெஜ்ரிவால் பேச்சு
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம் எனவும், அவரை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது எனவும் டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Advertisement

‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளன. மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகள், மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் புதிய நெருக்கடிகளை சந்திப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா, விசிக தலைவர் திருமாவளவன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பிற இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்ட மேடையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், “பிரதமர் மோடி எனது கணவரை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார். கெஜ்ரிவால் ஓர் உண்மையான தேசபக்தர். அவர் நேர்மையானவர். ஆனால் பாஜகவினர் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். அவர் ஒரு சிங்கம். அந்தச் சிங்கத்தை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது.

நாங்கள் இன்று வாக்கு கேட்கவில்லை. புதிய இந்தியாவை உருவாக்க 140 கோடி இந்தியர்களை அழைக்கிறோம். நம் இந்தியா பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரீகம் கொண்ட மகத்தான நாடு. இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு கிடைத்தால் புதிய இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா கூட்டணி சார்பில் 6 உத்தரவாதங்களை நான் முன்வைக்கிறேன்.

  1. நாடு முழுவதும் மின்வெட்டு இருக்காது.
  2. ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம்.
  3. ஒவ்வொரு கிராமத்திலும் அரசு பள்ளிகளை உருவாக்குவோம்.
  4. ஒவ்வொரு கிராமத்திலும், மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்குவோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு அரசு மருத்துவமனை, அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
  5. விவசாயிகளுக்கு பயிர்களுக்கு சரியான விலை வழங்கப்படும்.
  6. டெல்லி மக்கள் 75 ஆண்டுகளாக அநீதியை எதிர்கொண்டுள்ளனர். எனவே டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம்.

இந்த 6 உத்தரவாதங்களையும் நாங்கள் வருகிற 5 வருடத்தில் செய்து முடிப்போம். இந்தத் தருணத்தில் நான் கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தை வாசித்துக் காட்ட விரும்புகிறேன்” எனக் கூறி அந்தக் கடிதத்தையும் வாசித்துக் காட்டினார்.

அக்கடிதத்தில், “நாங்கள் உங்களிடம் இன்று வாக்கு கேட்கவில்லை. மாறாக 140 கோடி இந்தியர்களும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்குமாறு கேட்கிறேன். இந்தியா பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகப்பெரிய தேசம். இந்தச் சிறையினுள் இருந்துகொண்டு நான் எப்போதும் பாரத மாதாவை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நாம் அனைவரும் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags :
Advertisement