"சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுத்துள்ளார்" - ஃபரூக் அப்துல்லா
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்க துறை காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"சிறைக்கு சென்ற பிறகு அவரது அந்தஸ்து மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மிகப் பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார். இது ஆம் ஆத்மிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும். ஆம் ஆத்மி பஞ்சாபில் 13 மக்களவை தொகுதிகளையும், டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றும்.
நமது நிலத்தை பிரதமர் வங்கதேசத்துக்கு அளித்துள்ளார். லடாக்கில் உள்ள இந்திய பகுதிகளை சீனா கைப்பற்றியுள்ளது. அருணாசலப்பிரதேச பகுதிகளுக்கு சீனா நேற்று பெயர் வைத்துள்ளது. இதற்கெல்லாம் பாஜக எதுவும் பதிலளிக்கவில்லை. ஒருவரை பார்த்து ஒரு விரலை நீட்டினால், 3 விரல்கள் உங்களை நோக்கி இருக்கும்."
இவ்வாறு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.