ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை துபாய் சிறையில் இருந்து அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்ல முடிவு செய்துள்ளனர்.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இதன் இயக்குநர்கள் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அண்மையில் அறிவிக்கப்பட்டனர். மேலும் இவர்கள் இருவரும் துபாயில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்ய, ‘இன்டர்போல்’ எனும் சர்வதேச போலீசாரின் உதவியை நாடி, அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆருத்ரா வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த ராஜசேகரை துபாய் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ராஜசேகரை துபாய் நீதிமன்ற அனுமதியுடன் சென்னை அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்ல முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் ஏற்கனவே துபாய் நீதிமன்றத்தில் சமிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.