For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

10:58 AM Nov 28, 2023 IST | Web Editor
“கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும்  திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
Advertisement

டிசம்பர் 24ம் தேதியில் நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும்  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

தமிழ் திரைப்படத்துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து வருகிற டிசம்பர் 24-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை இதுவரை யாரும் காணாத வகையில், நாடே வியந்து போகும் அளவுக்கு மாபெரும் நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும்,  இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த நடிகர்களான ரஜினிகாந்த்,  கமல்ஹாசன், விஜய்,  அஜித் உள்ளிட்ட பல முக்கிய நபர்களுக்கும்  அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

மேலும் இந்த தேதியின்போது இந்தியாவின் எந்த பகுதியிலும் படப்பிடிப்புகள் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இலவசமான பாஸ் QR Code  வசதியுடன் வழங்கப்படும். பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி உண்டு. கலைஞர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் டிச. 24-ம் தேதி முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் தலைவருமான எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. எனவே கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும்,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும்  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆர். மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள். அன்று தமிழ்நாடு மக்கள் அனைவருமே எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்துவார்கள். இந்த நாளில், தமிழ் திரைப்படத் துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறது.

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பவர் யார்?" என்ற பாடல் வரிகளுக்கேற்ப, மக்கள் மனங்களில் நீக்கமற நிலைத்திருக்கும் எம்.ஜி.ஆரின் தன்னலமற்ற தியாகங்களை, சாதனைகளை, பணிகளை கருத்தில் கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Tags :
Advertisement