“கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் 'இந்தியா' கூட்டணியை வலிமையாக்கியுள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் அனைத்தும் 'இந்தியா' கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்தவில்லை” என்று டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை திமுக எம்.பி. திருச்சி சிவா வாசித்தார்.
‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளன. மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகள், மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் புதிய நெருக்கடிகளை சந்திப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா, விசிக தலைவர் திருமாவளவன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பிற இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் திமுக எம்.பி திருச்சி சிவா கலந்துகொண்டு, முதலமைச்சரின் உரையை வாசித்தார். அதில்,
“டெல்லி மாநிலத்தின் முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் திமுகவின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனக்கு எதிராக 'இந்தியா' என்ற வலிமையான கூட்டணியை எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அமைத்தது முதல் நிலைகொள்ளாமல் தவறுகளுக்கு மேல் தவறுகளைச் செய்து வருகிறது பாஜக தலைமை. 'இந்தியா' என்ற பெயரே அவர்களுக்கு கசப்பானதாக மாறியது. இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் ஏதோ இந்த நாட்டின் எதிரிகளைப் போல நடத்தத் தொடங்கியது பாஜக தலைமை. பாஜக அல்லாத மாநிலங்களை ஆளும் அரசுகளை, மிகமோசமாக நடத்தினார்கள். ஆட்சிகளைக் கவிழ்ப்பது, கூட்டணிகளை உடைப்பது, எம்எல்ஏ-க்களை இழுப்பது என அனைத்து இழிவான செயல்களையும் செய்தார்கள்.
அதன்பிறகு, சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி மிரட்டுகிறார்கள். இதில் மிரண்டு பாஜகவில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்குகளே திரும்பப் பெறப்படும். ஆனால் பாஜகவின் ஆணவங்களுக்கு அடங்காதவர்களாக இருந்தால் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இது இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதைப் போல இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சரான ஹேமந்த் சோரன் முதலில் கைது செய்யப்பட்டார்கள். இப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 'இந்தியா' கூட்டணியின் முக்கியத் தலைவர்கள். இந்தியாவின் முக்கியமான தலைவர்கள். இவர்களைக் கைது செய்வதன் மூலமாக 'இந்தியா' கூட்டணியை குலைத்துவிட முடியாது.
இது போன்ற கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் அனைத்தும் 'இந்தியா' கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்தவில்லை. அரைக்க அரைக்க சந்தனம் மணப்பதைப் போல, தாக்குதல் அதிகமாக அதிகமாக கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள். இதைத்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பார்க்கிறோம்.
பாஜக சில மாதங்களுக்கு முன்பு வரை வெற்றி பெற்றுவிடுவோம் என்று கருதியது. ஆனால் நாளுக்கு நாள் தோல்வியை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம், ராமர் கோயில் என்று அடுக்கடுக்காத தனது அஜெண்டாவை பாஜக அவிழ்த்துவிடக் காரணம், இவை எதுவும் பாஜகவுக்கு கை கொடுக்கவில்லை. அதனால் தான் இந்தியா கூட்டணித் தலைவர்களைக் குறி வைத்தார்கள்.
கெஜ்ரிவால் கைது செய்திருப்பது அத்தகைய நடவடிக்கை தான். கெஜ்ரிவால், தேர்தல் சுற்றுப்பயணம் செய்து பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் அவர் கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை நினைத்து, அவரது பிரச்சாரத்தை தடுக்கும் முயற்சியாகவே அவரைக் கைது செய்துள்ளார் பிரதமர் நரேந்திரமோடி. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை ஏற்படுத்தி இருக்க வேண்டிய வரவேற்பை விட அவரைக் கைது செய்தன் மூலமாக கிடைத்த அரசியல் விழிப்புணர்வு என்பது மிகமிக அதிகம்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் வருகையை வரவேற்ற படித்த - நடுத்தர - உயர் வகுப்பு இளைஞர்கள் மத்தியில் இந்தக் கைது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'அரவிந்த் கெஜ்ரிவாலை பழிவாங்கும் நோக்கத்தோடு மோடி கைது செய்துள்ளார்' என்ற எண்ணத்தை இந்த தரப்புக்கு ஏற்படுத்தி உள்ளது. ' 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறப் போகிறவர், எதற்காக இப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்று நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள். இதுவரை மோடி ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கூட, கெஜ்ரிவால் கைதுக்குப் பிறகு மோடியை விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை.
கெஜ்ரிவால், சிறைக்குள் இருந்து ஆட்சியை மட்டும் நடத்தவில்லை, இந்தியா கூட்டணியின் எழுச்சிக்கும் தூண்டுதலாக அமைந்து விட்டார். கெஜ்ரிவாலை கைது செய்வதன் மூலமாக 'இந்தியா' கூட்டணித் தலைவர்களை மிரட்டிப் பார்க்க நினைத்தால் பிரதமர் நரேந்திரமோடி ஏமாந்து போவார். நாடு முழுவதும் நடக்கும் அனைத்து அசைவுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அடக்குமுறை மூலமாக யாரும் வென்றதாக வரலாறும் இல்லை. ஆணவக்காரர்களின் ஆட்டத்தை மக்கள் அனுமதித்ததும் இல்லை.
டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் துடிப்புடன் பணியாற்றி வரும் ஆம் ஆத்மி தொண்டர்கள் இதன் மூலமாக சோர்வடைந்து விட மாட்டார்கள். பாஜகவை வீழ்த்தியாக வேண்டிய அவர்களது உறுதிக்காரணங்கள் அதிகமாகி வருவதை உணர்வார்கள். இந்த சூழலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திமுக துணை நிற்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த முதல் கட்சி திமுக தான்.
அடக்குமுறைகள், சர்வாதிகாரங்கள் ஆகியவை எந்த வடிவில் வந்தாலும் எதிர்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் கட்சி, இப்போதும் அதே உறுதியுடன் துணை நிற்கிறது.
'இந்தியா' கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் உறுதியுடன் தங்கள் போராட்டத்தை தொடர வேண்டும். மோடி ஆட்சி மீண்டும் வந்தால், இப்போது இருக்கும் இந்தியாவின் ஜனநாயக - அரசியலமைப்புச் சட்டப்பண்புகள் வேரோறு சாய்க்கப்படும் என்பதை பரப்புரை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
'இந்தியா ' கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். மக்கள் அளிக்கும் வாக்கு மட்டும் தான் பாஜகவின் பாசிச ஆட்சிக்கு முடிவுரை எழுத முடியும். கெஜ்ரிவால் விரைவில் வெளியில் வருவார். 'இந்தியா' கூட்டணியை வலிமைப்படுத்தவும், இந்தியாவை செழுமைப்படுத்தவரும் அவர் விரைவில் வருவார். போராட்டக் களத்துக்கு வந்திருக்கும் அனைத்துத் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜகவை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். பரப்புரை பயணத்தில் இருப்பதால் என்னால் டெல்லி வர இயலவில்லை. பாஜகவை வீழ்த்துவோம். கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்” இவ்வாறு அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.