இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.25 லட்சம் மோசடி செய்தவர் கைது!
இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இண்டிகோ நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் ஒன்றை கண்டுள்ளார். பின்னர் அதில் குறிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் பேசிய நபர் தனது பெயர் அலெக்ஸ் பாண்டியன் என்றும் இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வேலைக்காக ரூ.1.25 லட்சம் பணம் கட்ட வேண்டும் என கூறியதை நம்பி தினேஷ் பணத்தை ஆன்லைனில் செலுத்தினார். பணத்தை பெற்றுக் கொண்ட அலெக்ஸ் இண்டிகோ நிறுவன பணி நியமன ஆணையை ஆன்லைனில் தினேஷ்குமாருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் தினேஷ் அந்த பணி நியமன ஆணையை எடுத்துக் கொண்டு சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு கொண்டு காண்பித்த போது அது போலி நியமன ஆணை என தெரியவந்தது.
இதையும் படியுங்கள்: உதகை மலை ரயில் மேலும் 2 நாட்களுக்கு ரத்து!
இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிழக்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தினேஷ்குமாரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நபர் டெல்லியில் இருப்பதை கண்டு பிடித்தனர். பின்னர் தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து விசாரணையில் அலெக்ஸ் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், Quikr இணையத்தில் வேலை தேடும் நபர்களின் எண்ணை கண்டுபிடித்து அவர்களிடம் இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கைதுசெய்யப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் இதுபோல் பல இளைஞர்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அலெக்ஸ் பாண்டியனிடம் இருந்து 13 ஏடிஎம் கார்டு, 8 வங்கி புத்தகம், போலி பணி நியமன சான்றிதழ் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.