ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - #VCK பிரமுகரிடம் விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு தொடர்பாக வழக்கறிஞராக பணிபுரியும் விசிக பிரமுகரிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்க்க வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, மர்ம நபர்கள் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்தனர்.
அவர்களில் திருவெங்கடம் என்ற குற்றவாளி தப்பிக்க முயற்சித்தாக கூறி போலீசார்
என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.
இதனையடுத்து தொடர்ந்து கைதானவர்கள், கொலைக்கு பின்னனியில் யார் உள்ளார்கள் என்ற தகவலை தெரிவித்தனர். இதில் திமுக, அதிமுக,பாஜக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட முக்கிய கட்சியின் நிர்வாகிகள் என மொத்தமாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்விரோதம் மற்றும் பகை காரணமாக ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்காக கூலிப்படைக்கு, பலரும் பணம் கொடுத்தது தெரியவந்தது. குறிப்பாக சிறையில் இருந்து இந்த கொலைக்கு பிரபல ரவுடி நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும், இதனை சம்போ செந்தில் செய்து முடித்தாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே சம்போ செந்திலை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், தொடர்ந்து தலைமைறவாகவே இருந்து வருகிறார். பல இடங்களில் தேடியும் இன்னும் சிக்கவில்லை. இந்தநிலையில் சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே மொட்டை கிருஷ்ணாவுடன் தொடர்புகொண்டதாக பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவியிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்று காலை இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் விசிக பிரமுகர் ஒருவரிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவருக்கும் நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.