காஷ்மீரில் பாலியல் குற்றங்கள் - பாகிஸ்தானின் குற்றச்சாட்டிற்கு இந்தியா பதிலடி!
ஐக்கிய நாடுகள் சபையில், ‘போர் சூழலுக்கு மத்தியில் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களுக்கான உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங்கள்’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி அசிம் இப்திகார் அகமது, காஷ்மீரில் உள்ளவ சமூகங்களை தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் பாலியல் வன்முறையானது நீண்டகாலமாக பயன்படுத்தபடுவதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டு குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் ஆலோசகர் மற்றும் பொறுப்பாளர் எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் பதிலளித்து பேசினார்.
அப்போது அவர் "1971 ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு பாகிஸ்தானில் (வங்காளதேசம்) லட்சக்கணக்கான பெண்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் செய்த பாலியல் வன்முறை குற்றங்கள் தண்டனையின்றி முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடான பதிவாகும்.
சமீபத்திய OHCHR அறிக்கைகள் படி, மத மற்றும் இன சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான துன்புறுத்தலுக்கான ஆயுதங்களாக, கடத்தல், கடத்தல், குழந்தை திருமணம், கட்டாய திருமணங்கள்,வீட்டு அடிமைத்தனம், பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கட்டாய மத மாற்றங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் இப்போது "நீதியின் வீரர்கள் போல் வேடமிட்டு வருவது முரண்பாடானது. இதன் போலித்தனமும் பாசாங்குத்தனமும் வெளிப்படையாகத் தெரிகிறது. "மோதல் தொடர்பான கொடூரமான பாலியல் வன்முறைச் செயல்களைச் செய்பவர்கள் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் மோதல் மண்டலங்களில் பாலியல் வன்முறை தனிப்பட்ட வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல், சமூகங்களின் கட்டமைப்பையே கிழித்து, தலைமுறை தலைமுறையாக சமூகங்களில் நீடித்த வடுக்களை விட்டுச்செல்கிறது," என்று அவர் தெரிவித்தார்.