ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் எங்கே? வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில் வெளிநாட்டு தப்பி சென்றுள்ளதால், லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
மேலும், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹரிதரனை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும், இவர் அதிமுகவின் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராக இருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன்களை ஹரிதரன் சேதப்படுத்தி கொசஸ்தலை ஆற்றில் வீசி எறிந்துள்ளார். இதனையடுத்து தனிப்படை போலீசார், நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களின் உதவியுடன் கொசஸ்தலை ஆற்றிலிருந்து செல்போன்கள் மீட்கப்பட்டன.
இதையும் படியுங்கள் : ராணிப்பேட்டையில் ‘ஜாகுவார்’ ஆலை! அடுத்த மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்!
முன்னதாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களை ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ரவுடி சம்போ செந்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச் சென்றதாக தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் வரும் ரவுடி சம்போ செந்திலுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.