#ArmstrongMurderCase - சிறையிலிருந்த திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அஸ்வத்தாமன், ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கூலிப்படையை சேர்ந்த திருவேங்கடம் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே மொட்டை கிருஷ்ணாவுடன் தொடர்பு கொண்டதாக பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவியிடமும் விசாரணை நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி திருவேங்கடம் துபாயில் இருந்து ஆகஸ்ட் - 23ம் தேதி அதிகாலை சென்னை வந்த போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதையும் படியுங்கள் : கொலை வழக்கில் சிக்கிய நடிகர் #darshan | சிறையில் சொகுசு வாழ்க்கை! - வைரலாகும் புகைப்படம்...
முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, 2020ஆம் ஆண்டு வரை இவரிடம் சம்போ செந்தில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் முன்னாள் மனைவியிடம் இருந்து சம்போ செந்திலின் தற்போதைய உருவம் குறித்த புகைப்படத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திருமலை (45) என்பவருக்கு நேற்று (ஆகஸ்ட் -25ம் தேதி) திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக சிறைத்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறையில் இருக்கக்கூடிய மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். பின்னர், அவருக்கு நெஞ்சுவலி அதிகமானதால் காவல்துறையினர் பாதுகாப்புடன் நேற்று இரவு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.