#Armstrong கொலை வழக்கு | குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல்!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பிரபல ரவுடி சம்போ செந்தில், வழக்றிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் பதுங்கி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசாரால் சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள சம்பவம் செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த குற்றப்பத்திரிக்கையை பரிசீலனைக்கு பின்பு, எழும்பூர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்தகட்டமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட வேண்டும்.
அந்த நடைமுறை இன்று (அக்-8ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, சிறையில் உள்ள 27 (2பேர் ஏற்கனவே என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருந்தார்) பேரையும் நேரில் ஆஜர்படுத்துவதற்கு பதிலாக காணொலி மூலம் ஆஜர்படுத்த போலீஸார் நீதிபதியிடம் அனுமதி கோரினர். அதற்கு நீதிபதியும் அனுமதி அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : Haryana சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை - இந்தியா கூட்டணி முன்னிலை!
இதைத்தொடர்ந்து, 27 பேரும் சிறையில் இருந்தபடி காணொலி மூலம் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். விசாரணைக்கு பின்பு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகி வரும் வழக்கறிஞர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட உள்ளது. பொதுவாக கொலை வழக்குகளை பொறுத்தமட்டில் செசன்ஸ் நீதிமன்றத்தில்தான் விசாரணை நடைபெறும். அந்த வகையில் குற்றப்பத்திரிகை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.