குரூப் 4 தேர்வில் பாடத்திட்டத்தை தாண்டி கேள்விகளை கேட்பதா.? - அண்ணாமலை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இதில் தழிழ் பாடத்திற்கான தேர்வு மிக கடினமானதாக இருந்ததாகத் தேர்வர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் தேர்வுக்கு கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தைத் தாண்டியும் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் பல்வேறு தரப்பினரும் மறுத்தேர்வு நடத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் நாடு முன்னாள் பாஜக தலைவரான அண்ணாமலை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வினை ரத்து செய்து விட்டு மறுத்தேர்வு நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
”கடந்த 12.07.2025, சனிக்கிழமை அன்று நடைபெற்ற தேர்வில், தமிழ்ப் பாடத்தில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில், சுமார் 50க்கும் மேற்பட்ட கேள்விகள், பாடத்திட்டத்தில் இல்லாத, கேள்விகளே புரியாத வண்ணம், மிகவும் சிக்கலான கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளன என, தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக அரசு வேலைக்குத் தங்கள் நேரத்தையும், கடின உழைப்பையும் கொடுத்துப் பாடுபட்ட இளைஞர்கள், இறுதியில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால், தங்கள் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமின்றி, தவிர்க்கப்பட வேண்டியதும் கூட. எனவே, தமிழக அரசு, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற TNPSC குரூப் 4, தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். அல்லது, பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை, அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் அல்லது, ஒட்டுமொத்தமாக அந்தக் கேள்விகளை நீக்கி, மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற பாடத்திடத்தில் இல்லாத கேள்விகள் தேர்வில் கேட்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்றுத் தெரிவித்துள்ளார்.