விரைவில் புதிய பாஜக மாநிலத் தலைவருக்கான அறிவிப்பு!
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவரது பதவியில் இருந்து மாற்றப்படவுள்ளார் என சமீப காலமாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், இன்றளவும் அது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகள் பாஜக சார்பில் வெளியாகவில்லை.
இதனிடையே எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சு வார்த்தைகள் பற்றியும் தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக அண்மையில் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழ்நாடு அரசியலில் பேசுப்பொருளானது. இது குறித்து இபிஎஸ் அளித்த பேட்டியில் மக்கள் நலனுக்காக அந்த சந்திப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அதன் பின்பு மீனவர்கள் பிரச்னை சார்பாக டெல்லி சென்ற அண்ணாமலை, அமித் ஷாவை சந்தித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம், கூட்டணி குறித்து பேச காலங்கள் உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்து பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் வர உள்ளது, மக்கள் நலனுக்காக எதையும் செய்யத் தயார் என்றும் தொண்டனாக செயல்படுவேன் என்றும் பேசினார். இவ்வாறு அவர் பேசியது பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் குறித்த விவாதங்களுக்கு வழிவகுத்தது. இது தொடர்பாக நேற்று(ஏப்ரல்.05) செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நான் தமிழ்நாடு பாஜக தலைவருக்கான போட்டியில் இல்லை என தெரிவித்தார்.
இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக புதிய மாநில தலைவர் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் வரலாம என எதிர்பார்க்கப்படுகிறது.