அண்ணா பல்கலை மாணவி விவகாரம் - போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!
அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, மதுரையில் தடையை மீறி நீதி கேட்பு பேரணியில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் நேற்று பாமக சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற இருந்தது.
ஆனால் போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். தொடர்ந்து போராட்டம் நடந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணி உட்பட அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் உண்மையை மறைக்க முயல்வதாகவும் கூறி பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி சார்பில் மதுரை முதல் சென்னை வரை நீதி கேட்டு பேரணி
நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயிலில் உள்ள கண்ணகி சிலையில் இருந்து பாஜக மகளிரணி மாநில தலைவர் உமாரதி தலைமையில் நடைபெறும் நீதி கேட்பு பேரணியை குஷ்பு துவக்கி வைத்தார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த பேரணி திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடைந்து பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் காவல்துறை தடையை மீறி நீதி கேட்பு பேரணியில் ஈடுபட முயன்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ, பாஜக மகளிரணி மாநிலத் தலைவர் உமாரதி உள்ளிட்ட பாஜக மகளிரணியினர் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ கூறுகையில், “பாஜக
உண்மையை மட்டும் பேசுவதால், திமுக அரசு பாஜகவினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து கைது செய்கிறது. பாஜகவின் உண்மையான கருத்துக்களை மக்கள் காது கொடுத்து கேட்க தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு நாளும் திமுக அரசுக்கு எதிராக பாஜக என்ன கேள்வி எழுப்ப போகிறது எனும் பயத்தில் திமுக உள்ளது. பாஜக கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளிக்க மறுத்து வருகிறார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை பாஜக தொடர்ந்து போராட்டம் நடத்தும்” என தெரிவித்தார்.