“நேரடியாக பேசினாலே கூட்டணி அமையும்... ரைடு நடத்த அவசியமில்லை” - நயினார் நாகேந்திரன்!
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சுபாஸ் சந்திரபோஸின் படத்திற்கு மலர் தூவி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் பாஜக சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்திற்கு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
"சுபாஷ் சந்திர போஸ் இல்லை என்றால் வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்க மாட்டார்கள். டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரம் தொடர்பாக நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. பெரியார் விவகாரத்தில் சீமான் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்திருக்கிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கருத்து சொல்லி இருக்கிறார். ஆனால் நான் பெரியார் பற்றிய புத்தகத்தை படிக்கவில்லை. புத்தகத்தை படித்த பின் கருத்து தெரிவிக்கிறேன்.
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும். ரைடு நடத்தி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை. அதிமுகவினர் தொடர்புடைய வீட்டில் மட்டும் ரெய்டு நடக்கவில்லை. திமுகவினர் வீட்டிலும் நடக்கிறது. யார் யார் வீட்டில் பணம் இருக்கிறது என வருமானவரித்துறை நினைக்கிறதோ அங்கு ரெய்டு நடக்கும். நாளை உங்கள் வீட்டில் கூட ரெய்டு நடக்கலாம்" என்று தெரிவித்தார்.