“பாஜகவின் ஊழல்களுக்கெல்லாம் அமித்ஷா தலைமை தாங்குகிறார்” - நாராயணசாமி குற்றச்சாட்டு!
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் குடிநீர், சாக்கடை பிரச்னை, குப்பை பிரச்னை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் 24 மணிநேர காத்திருப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மணிகூண்டு எதிரில்
நடைபெற்றது.
முத்தியால்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ்
நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு
புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,
மக்களுக்கான அடிப்படை தேவைகளை செய்ய முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரஸ் – பாஜக அரசு தவறிவிட்டது. முத்தியால்பேட்டை தொகுதியில் மிகப்பெரிய அளவில் குடிநீர் பிரச்னை உள்ளது. குடிநீரில் டிடிஎஸ் அளவு 500ஆக இருக்க வேண்டும்.
ஆனால், இப்போது முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள 14 பூத்துகளில் 2400க்கு
மேல் டிடிஎஸ் அளவு அதிகமாக உள்ளது. இந்த தண்ணீரை பொதுமக்கள் தொடர்ந்து குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு 3 அல்லது 4 ஆண்டுகளில் நீரிழிவு நோய் வரும். எல்லா பகுதிகளிலும் சாக்கடை பிரச்னை உள்ளது. இதையும் தீர்த்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
பொது இடங்களில் குப்பைகளை வாருவது கிடையாது. இதனாலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. இப்பிரச்னைகளை முன் வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அரசிடம் மக்கள் வேலை கேட்கவில்லை. விலை உயர்ந்துவிட்டது, அதனை கட்டுப்படுத்துங்கள் என்று கேட்கவில்லை. உயிரோடு இருப்பதற்கு சுத்தமான குடிநீர் தான் மக்கள் கேட்கிறார்கள். இதை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை.
சுகாதாரம், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதாக முதலமைச்சர் கூறுகிறார்.
சுகாதாரமாக மக்களை வைத்திருக்க என்ன செய்துள்ளார். மக்களின் உயிரோடு
முதலமைச்சரும், அமைச்சர்களும் விளையாடுகிறார்கள்” எனப் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த நாராயணசாமி,
தொகுதி மறுசீரமைப்பை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு, மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் பாதிப்பு ஏற்படும். இதனால் தென்மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். வட மாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகும். 2026-ல் ஏற்கனவே உள்ள நாடாளுமன்ற சட்டப்படி தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இது எங்களுடைய கருத்து.
இதைத்தான் தென் மாநில முதலமைச்சர்களை அழைத்து முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஊழல் நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார்.
ஆனால் அவருக்கு பாஜக ஆளும் மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களில் நடைபெறும் ஊழல்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?.
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனைதான் நடத்துகின்றனர். அதை வைத்து ஊழல் என்று எப்படி நாம் சொல்ல முடியும்?. மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழல்களுக்கு தலைமை தாங்குகிறார்” எனக் கூறினார்.