For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வரும் 27-ம் தேதிக்குள் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என அமித்ஷா உறுதியளித்துள்ளார் - டி.ஆர்.பாலு பேட்டி!

04:30 PM Jan 13, 2024 IST | Web Editor
வரும் 27 ம் தேதிக்குள் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என அமித்ஷா உறுதியளித்துள்ளார்   டி ஆர் பாலு பேட்டி
Advertisement

வரும் 27-ம் தேதிக்குள் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார். 

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதே போன்று,  டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

வரலாறு காணாத கனமழை காரணமாக தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் 5 முதல் 6 நாள் வரை மின்சாரம் இல்லாத நிலை இருந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களையும் அரசு வழங்கியது. 

சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தபோது நேரடியாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், ஜனவரி 13-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளதாகவும், அதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

அதன்படி, இன்று (ஜன. 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, சி.பி.ஐ நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், சி.பி.எம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார், முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, கொங்கு நாடு மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகிய 8 பேர் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  டி.ஆர்.பாலு கூறியதாவது,

“மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாடு வெள்ள பாதிப்பு தொடர்பாக விரிவான அறிக்கை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கோரிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய அமைச்சரும், மத்திய குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் பேரிடர் பாதிப்புக்கு ஏற்க சம்மந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து விரைவில் நிதி விடுவிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

NDRF என்ற தேசிய பேரிடர் நிதியில் இருந்து நிதியளிக்க கேட்டதன்பேரில், மிகவிரைவாக அளிப்பதாக வாக்களித்துள்ளார். 21-ம் தேதிக்கு பிறகு பெறப்படும் அறிக்கையின் பேரில், உள்துறை, விவசாயத்துறை உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து பேசி, கொடுக்கவேண்டிய நிதியை கொடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். 27-ம் தேதிக்குள் நிதியை வழங்குவதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

ரூ.37,907 கோடி தேவை. முதலமைச்சர் நேரடியாக மோடியிடம் தெரிவித்தார். அவர்கள் புறக்கணிப்பதாக இருந்தால் இத்தனை குழுக்களை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அனுப்பியிருக்காது. இந்த சேதத்திலிருந்து விடுபட உதவுவது எங்கள் கடமை என அமித்ஷா தெரிவித்துள்ளார். அமித்ஷாவுடனாக சந்திப்பு மிக நிறைவாக இருந்தது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு சரியான பதிலை உடனடியாக வழங்கினார். மத்திய அரசு தமிழ்நாடு அரசை புறக்கணிப்பதாக கூற முடியாது. தமிழ்நாடு வெள்ளத்தால் அதிக சேதம் ஏற்படுள்ளத்தை தான் உணர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்ததார்.”

இவ்வாறு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

Tags :
Advertisement