அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு : அதிமுக - பாஜக கூட்டணி முதற்கட்ட பேச்சுவார்த்தை சக்சஸ்?
தேசிய அளவிலான அரசியல் மட்டுமின்றி, மாநில அளவிலான அரசியலை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் டெல்லிக்கு உள்ளது. இந்தியாவின் இரு பெரும் தேசிய கட்சியாக உள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்டவற்றின் உச்சபட்ச தலைவர்களும் அதன் தலைமை அலுவலகங்களும் டெல்லியில் உள்ளது. இதனால் நாட்டின் எந்த ஒரு மாநிலத்தின் அரசியல் கூட்டணி முடிவுகளும் டெல்லியில் இருந்தே தொடங்கி முடிவும் செய்யபடுகிறது.
அந்தவகையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்தான குழப்பமான முடிச்சுகளை அவிழ்க்க பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது. இதன் காட்சிகளை 2025 தொடக்கத்திலேயே பார்த்திருக்க முடியும். ஜனவரி மாதம் அண்ணாமலை பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற நிலையில் டெல்லியில் அண்ணாமலைக்கு சில பாடங்களை பா.ஜ.க மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா எடுத்ததாகவும், அதன் பின்னர் அதிமுக தலைவர்கள் குறித்தும், அதிமுக கட்சி ரீதியாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிருப்தியான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க தொடங்கினார்.
அ.தி.மு.க.வின் உயர்மட்ட தலைவர்களும் பாஜக குறித்து கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்ததோடு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது குறித்து உறுதியாக கூறவும் மறுத்தனர். குறிப்பாக, சமீபத்தில் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பே பா.ஜ.க.வுடன் இணக்கமான சூழல் தொடங்குவதற்கான அறிகுறி என அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் தொடங்கியது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் சட்டமன்ற அலுவல் நேரங்களில் பங்கெடுத்து அரசியல் ரீதியாகவும், திட்டங்கள் ரீதியாகவும் கேள்விகளை எழுப்பி வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று (மார்ச் 25) திடீரென காலை டெல்லி புறப்பட்டு சென்றார். எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் மூத்த தலைவர்கள் யாரும் பயணிக்கவில்லை.
அதேபோல, டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறை சார்ந்த செயலாளர்கள், தமிழக டிஜிபி, காவல்துறை உயர் அதிகாரிகள் என டெல்லி வருகையின் போது பயன்படுத்துவதற்காக தமிழக மற்றும் டெல்லி பதிவு எண் உடைய இலச்சினை மற்றும் மூவர்ண கொடி கொண்ட அரசு வாகனங்கள் உள்ளது. அதனை இயக்குபவர்கள் தமிழக அரசு ஊழியர்கள் என்பதால் டெல்லி பயணத்தின் சந்திப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்தான ரகசியங்கள் கசியலாம் என்பதன் அடிப்படையில் அரசு வாகனத்தையும் எடப்பாடி பழனிசாமி தவிர்த்துள்ளார்.
அதிமுக எம்.பி-க்கள் விமான நிலையத்தின் விஐபி வரவேற்பு அறைக்குள் சென்ற சில நிமிடத்தில் விமானம் தரையிறங்கியது. அடுத்த சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி அழைத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே வந்த போது, தனது உதவியாளர் ரெடியாக கையில் வைத்திருந்த சால்வையைப் பெற்று எடப்பாடி பழனிசாமிக்கு அணிவித்து வரவேற்பு தெரிவித்தார் தம்பிதுரை.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, டெல்லி சாகேத் பகுதியில் பிப்ரவரி 10ம் தேதி திறக்கப்பட்ட அதிமுக கட்சி அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டு கட்சி அலுவலகத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் அறையில் உள்ள இருக்கையில் அமர்ந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளோடு அரை மணி நேரங்களுக்கு மேல் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்புக்கான நேரம் உறுதி செய்யப்பட்டவுடன் விரைந்து செல்ல ஏதுவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்திற்கு அருகில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார் எடப்பாடி பழனிசாமி.
அதேவளையில், சென்னையிலிருந்து டெல்லி வந்தடைந்த அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி இருவரும் எடப்பாடி கே.பழனிசாமி தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு சென்று அவரை சந்தித்தனர். தொடர்ந்து இரவு 8.18 மணிக்கு டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் இல்லத்தில் வைத்து அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை கே.பி முனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி சண்முகம், சந்திரசேகர் ஆகியோர் சந்தித்தனர்.
சுமார் 2 மணி நேரங்கள் நீடித்த சந்திப்பு இரவு 10.30 மணி அளவில் நிறைவடைந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சரின் இல்லத்தில் இருந்து அனைவரும் புறப்பட்டனர். இதற்கிடையில் சினிமா பாணியில் இந்த சந்திப்பிற்கும் இரு வாகனங்களை எடப்பாடி கே.பழனிசாமி பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் போது AUDI எலக்ட்டிரிக் காரில் சென்ற நிலையில் இரண்டு மணி நேர சந்திப்பு நிறைவடைந்து பென்ட்லி காரில் வெளியேறினார்.
தான் எந்த காரில் பயணம் செய்கிறேன் என்பதை அடையாளம் காண முடியாத வகையில் காரை மாற்றி எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பயணித்தனர். மத்திய உள்துறை அமைச்சருடனான சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான முதற்கட்ட பேச்சு வார்த்தை முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
இவை தவிர தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பேசியுள்ளதாகவும்
டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல்கள் குறித்தும் அதன் மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்தும் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது.