சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரி ஆதிவராகநத்தம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த அரவிந்த், தமிழேந்தன், குணால் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, சிதம்பரம் நோக்கி நெய்வேலியில் இருந்து சாம்பல் ஏற்றி கொண்டு வந்த கனரக லாரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் லாரியின் அடியில் சிக்கி கொண்டதில் அரவிந்த் மற்றும் தமிழேந்தன் ஆகிய 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த அரவிந்த் மற்றும் தமிழேந்தன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை சாலையில் வைத்து கதறி அழுததால் விருதாச்சலம் கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார் சிதம்பரம் டிஎஸ்பி, சேத்தியாதோப்பு டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரான நிலையில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.