தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா? ஆந்திர முதலமைச்சர் பதவியேற்பு விழா மேடையில் நடந்தது என்ன?
தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா ? ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவின் பதவியேற்பு விழா மேடையில் நடந்தது என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான அரங்கில் இன்று காலை 11:27மணிக்கு சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பல்வேறு மத்திய அமைச்சர்கள், தமிழ்நாட்டில் இருந்து தமிழிசை சௌந்தரராஜன், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் சந்திரபாபுவைத் தொடர்ந்து அடுத்ததாக ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து நாரா லோகேஷ் உள்ளிட்ட 23அமைச்சர்களும் பதவியேற்றனர் . இவர்களுக்கு ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, விழா மேடைக்கு வந்த தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டு இருக்கையில் அமர்வதற்காக சென்றார். அப்போது அவரை அழைத்த அமித் ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசையும் கனிவான முறையில் பதிலளித்தார்.
ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அமித் ஷா, காட்டமாக பேசும் காட்சிகள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால், தமிழக பாஜக உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தமிழக பாஜக உள்கட்சி பூசல் குறித்து கட்சித் தலைமை இரு தரப்பிலிருந்தும் விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.