“என்னை பற்றி குறை சொல்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் அல்ல” - அண்ணாமலை பேட்டி!
என்னை பற்றி குறை சொல்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதி கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை பேசியதாவது,
“எப்போதும் இல்லாத அளவிற்கு பாஜகவில் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் கோவையில் என்ன மாற்றம் இருக்கும் என்பதை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் என்கிற அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். பாஜகவின் செயல் வீரர்களாகிய உங்களிடத்தில் தான் வாக்காளர்களை சந்திக்க வேண்டிய பொறுப்பை அளிக்கிறேன்.
பாஜக செயல் வீரர்கள் வேட்பாளர்களாக உணர்ந்து செயல்படுங்கள். கோவையில் பாஜக வெற்றியை சுவைத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. 2014-ம் ஆண்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்தது. சாதாரண பொது மக்களிடம் சென்று கேட்டால் கூட மோடி வெற்றி பெறுவார் என்று தான் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் கோவை மிகவும் முக்கியமான தொழில் நகரமாக இருக்கிறது.
தற்போது கோவை பொலிவை இழந்திருக்கிறது. கமிஷனுக்காகவே திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. வளர்ச்சிக்கு எதிராக செயல்படக்கூடியவர்களாகவே கடந்த கால கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்பி இருந்துள்ளார். ஆயிரக்கணக்கான கோடிகளை கொடுத்தும் கூட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பாழ்படுத்தி வைத்துள்ளனர். கல்வி, விளையாட்டு, வேலை வாய்ப்பை அனைவருக்கும் முறையாக கிடைக்கும்படி உருவாக்க வேண்டும்.
மற்றவர்களின் தவறான அரசியலை சரி செய்ய வேண்டும் என்பதே முதல் நோக்கம். நான் எந்த கட்சியையும், வேட்பாளர்களையும் குறைத்து பேச போவதில்லை. மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதனால் தான் மோடியின் உத்தரவின் பேரில் நான் வேட்பாளராக களம் இறங்கி இருக்கினேன். 2026-ல் பாஜக ஆட்சி அமைக்க கோவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்களை சந்திக்க வேண்டும். என்னுடைய கனவு முழுவதும் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். மற்ற கட்சிகள் கோவையை கோட்டையென்று சொல்கிறார்கள். நான் மக்களிடத்தில் இடம் பிடிக்க வந்துள்ளேன்.
மக்கள் மனதை வெல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோள். நாம் ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை சந்திக்கப் போவதில்லை” இவ்வாறு பேசினார்.
"மக்கள் மனதை வெல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோள்"https://t.co/WciCN2SiwX | @annamalai_k | @BJP4TamilNadu | #Annamalai | #Coimbatore | #LokSabhaElections2024 | #ElectionsWithNews7Tamil | #ParliamentaryElection2024 | #Election2024 | #BJP | #Kovai | #News7Tamil |… pic.twitter.com/gcAwaA6p3y
— News7 Tamil (@news7tamil) March 24, 2024
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“கோவையில் எந்த வேட்பாளருடனும் நான் போட்டி கிடையாது. அவர்கள் என்னை என்ன வேண்டுமானலும் சொல்லலாம். ஆனால் கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட நான் வரவில்லை. என்னுடைய வேலை மக்கள் பிரச்னைகளை சொல்லி வாக்கு கேட்பது. கடந்த தேர்தலில் சொன்ன 295 வாக்குறுதிகளை நிறைவேற்றுள்ளோம். கோவை மக்களுக்கு தெரியும் பாஜக என்ன செய்திருக்கிறது என்று. அண்ணாமலை சொல்ல வேண்டியதில்லை.
வளர்ச்சி வேண்டாம் என்று சொன்ன முன்னாள் எம்.பி.நடராஜ் கோவைக்கு என்ன செய்தார். ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள கட்சி திமுக. அதை நான் சொல்ல வேண்டியதில்லை. எடப்பாடி பழனிச்சாமி என்ன சொன்னோம் என்று தெரியாமல் பேசுகிறார். நாங்கள் டீ குடித்தாலும் சொந்த காசில் தான் குடிப்போம். வெறும் செங்கலை மட்டும் சொல்லி வாக்கு கேட்கிறார். திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார்களா. என்னை பற்றி குறை சொல்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் கிடையாது”
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.