"அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை செய்யவேண்டும்" - அண்ணாமலை வலியுறுத்தல்!
அனைத்து பட்டாசு ஆலைகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி, பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. அந்த ஆலையில் பட்டாசு தயாரிக்க பயன்படும் ரசாயன கலவை செய்தபோது, வேதியியல் மாற்றம் மற்றும் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், சிவக்குமார், மீனாட்சிசுந்திரம் ஆகிய 6 பேர் பரிதமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் மற்றும் மதுரை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
"விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
https://x.com/annamalai_k/status/1875448783733190715
விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும் ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே, அனைத்து பட்டாசு ஆலைகளிலும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்துமாறு, திமுக அரசை வலியுறுத்தியிருந்தோம்.
ஆனால், இது தொடர்பாக திமுக அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. இனியும் தாமதிக்காமல், அனைத்து பட்டாசு ஆலைகளிலும், தொழிலாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க, திமுக அரசை வலியுறுத்துகிறோம்"
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை தெரிவித்துள்ளார்.