For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அஜித்குமார் உடலில் 44 காயங்கள்.. மிருகத்தனமாக தாக்குதல்.. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை

அஜித்குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.
04:55 PM Jul 01, 2025 IST | Web Editor
அஜித்குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.
 அஜித்குமார் உடலில் 44 காயங்கள்   மிருகத்தனமாக தாக்குதல்   கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்    உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை
Advertisement

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் இளைஞர் அஜித்குமார் பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களை வழக்கறிஞர் ஹென்றி தாக்கல் செய்தார். மேலும், காவல்துறையினர் அடித்த வீடியோ நீதிபதிகளிடம் போட்டு காண்பிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைப் இரும்பு ராடுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களை வழக்கறிஞர் ஹென்றி தாக்கல் செய்தார்.

Advertisement

வழக்கறிஞர் ஹென்றி

தென்னை தோப்பில் வைத்து அஜித்குமாரை காவலர்கள் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். போலீசார் அஜித்குமார் மீது தாக்குதல் நடத்தியபோது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்தார். அஜித்குமாரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவ்வாறெனில் அங்கிருந்தே விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரது உடல் எதற்காக மதுரை கொண்டு வரப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. அவரது தாயாரும், சகோதரரும் 28 ஆம் இரவு 12 மணி வரை தனது மகன் குறித்து விசாரித்தனர். அப்போது, திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த SP, அஜித்தின் அம்மாவிடம், உங்கள் மகன் இறந்து விட்டார் என கூறினார்.

நீதிபதிகள்

நகைகள் காணாமல் போனது தொடர்பாக எப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது?

அரசுத்தரப்பு வழக்கறிஞர்

28.06.25 பதிவு செய்யப்பட்டது

வழக்கறிஞர் ஹென்றி

நேற்று இரவே அது ஆன்லைனில் அது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

அரசுத்தரப்பு வழக்கறிஞர்

புகார் அளித்தவும் CSR பதிவு செய்யப்பட்டது

வழக்கறிஞர் ஹென்றி

இது முழுக்க முழுக்க சட்ட விரோதமாக நிகழ்ந்த காவல் மரணம்.
தலைமை காவலர் கண்ணன் மானாமதுரை டிஎஸ்.பி யின் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து, திருப்புவனம் வந்து விசாரித்தது விதிமீறுவதாகவே பார்க்கப்பட வேண்டும். அஜித்குமார் விசாரணையின் போது தப்பித்து ஓட முயற்சித்துள்ளார் என காவல்துறை கதை கூறுகின்றனர்.

திமுகவை சேர்ந்த சேங்கைமாறன் (அவரது மனைவி பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்), மகேந்திரன் திருப்புவனம் திமுக செயலர், காளீஸ்வரன், மானாமதுரை டி.எஸ்.பி ஆகியோர் அஜித்குமார் இறந்த பின்பு 50 லட்சம் தருவதாக சமரசம் பேசியுள்ளனர். திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரிக்கும் போது அவரைச் சுற்றி காவல் துறையினர் சூழ்ந்திருந்தனர். உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்கவில்லை. உடற்கூராய்வு அறிக்கை அஜித்தின் தாயிடம் வழங்கவில்லை.

நீதிபதிகள்

நகை காணாமல் போன வழக்கில் ஏன் FIR பதியவில்லை? சிறப்பு விசாரணைக்கு மாற்றியது யார்? அவருக்கு என்ன அதிகாரம்? இந்த வழக்கை சிறப்பு பிரிவுக்கு மாற்றியதற்கான காரணம் என்ன? குற்றம் உறுதி செய்யப்பட்ட பின்னரே FIR பதிய வேண்டுமென் ற உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. சிறப்பு காவலர்கள் யார் உத்தரவின் பேரில் இந்த வழக்கை விசாரித்தனர்? தனிப்படை பிரிவு போலீசாருக்கு விசாரியுங்கள் என யார் உத்தரவு விட்டது? சமூக வலை தலங்களில் வரும் ஊழல், மாமூல் தகவல்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரிப்பார்களா?

அரசு தரப்பு

காவலர்கள் அஜித்தை பைப் மூலம் அடித்து விசாரித்தனர்.

நீதிபதிகள்

சிறப்புப்படை எந்த அடிப்படையில், யார் சொல்லி இந்த வழக்கை கையிலெடுத்தனர்? உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென முழுமையான விபரங்களை மறைக்கக்ச்கூடாது. திருட்டு வழக்கில் ஒரு நபரை விசாரணை என அடித்துக் கொன்றிருக்கிறார்கள். அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? புலனாய்வு செய்வதற்கே காவல்துறை. நீங்கள் முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள்.

வழக்கறிஞர் ஹென்றி

கோயிலில் இருந்த அனைத்து சிசிடிவிகளையும் காவல்துறையினர் நீக்கி உள்ளனர்.

நீதிபதிகள்

ஏன் பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவன் நிதி மன்ற நீதிபதிக்கு இன்னும் அளிக்கவில்லை. அரசு மக்களுக்காக வேலை செய்ய வேண்டும், யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டி. ஜி பி பதிலளிக்க வேண்டும். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏன் இடமாற்றம் செய்தீர்கள். உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். அரசு மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும்? சிறப்புப்படையிடம் ஒப்படைத்தது யார்? அஜித்தை 2 நாட்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? மாஜித்திரேட்டிக்கு உடனடியாக ஏன் உடற்கூராய்வு அறிக்கை அனுப்பபடவில்லை?

அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்? ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை? மாஜிஸ்திரேட் அவரது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர், அஜித்தின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். நண்பகல் 2:15 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வேண்டும். ஏன் இந்த வழக்கில் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? ஒட்டுமொத்த காவல்துறையை நாங்கள் குறை சொல்லவில்லை ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு தரப்பு

தவறு செய்தவர்கள் மீது நிச்சியம் அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தவர்களுக்கு ஒருபோதும் நாங்கள் ஆதரவாக இருக்க மாட்டோம்.

நீதிபதிகள்

ஏன் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை? - காவல்துறையினர் உயர் அதிகாரிகளின் சட்டவிரோத கட்டளைகளுக்கு கீழ்படிய வேண்டிய அவசியமில்லை. காவலர்கள் மக்களை பாதுகாக்க தான் உள்ளார்கள், காவல்நிலைய மரணங்களை நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணிக்கிறது. மனுதாரர்கள் சமர்ப்பித்தவை நீதிமன்றத்தை தொந்தரவு செய்கிறது. சட்டவிரோத காவல் மரணம் அடிப்படை உரிமைக்கு எதிரானது.

திருப்புவனம் நீதித்துறை மாஜிஸ்திரேட் அவரது விசாரணை அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர், அஜித் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தவர் மதியம் 3 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். உடற்கூராய்வு அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கை மாநில அரசு நீர்த்துப் போக வகையில் செயல்பட்டால் நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பிக்க நேரிடும். மிளகாய் பொடி பயன்படுத்தப்பட்டதா? என்பது மருத்துவ பரிசோதனையை பார்த்த பிறகு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை மதியம் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று மதியம் 3 மணியளவில் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. அப்போது, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார், உயிரிழந்த அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்தார்.

நீதிபதிகள்

உடலில் எந்த உறுப்பையும் காவலர்கள் விட்டுவைக்கவில்லை.
பதவி ஆணவத்தில் காவலர்கள் அஜித்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இது சாதாரண கொலை வழக்கு போல் இல்லை. அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலில் 44 காயங்கள் உள்ளன. சிறப்புப்படை FIR பதியப்படாமல் எப்படி வழக்கை கையிலெடுத்தது? குறைந்த பட்சம் ஒரு சீனியர் அலுவலரையாவது அக்குழு கொண்டிருக்க வேண்டும்
இப்போது அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இது போன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்கக் கூடாது. காவல்துறை கூட்டாக சேர்ந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது. கொடூரமான சம்பவமாக இருக்கிறது. மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது. அஜித்குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை.

அரசு தரப்பு

அரசு அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய 2 நாட்கள் அவகாசம் தேவைப்படுகிறது.

நீதிபதிகள்

கோவில் CCTV காட்சிகள் எங்கே?

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி சிசிடிவி காட்சிப்பதிவுகளை சிடியாக தாக்கல் செய்தார்.

நீதிபதிகள்

நடந்த சம்பவங்கள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளதா?

அரசு தரப்பு

அதனை சாட்சியாக ஏற்க சான்று வேண்டும்.

நீதிபதிகள்

காவல்துறையின் செயல் குறித்தே கேள்வி எழுகையில் அதனை சான்றாக எடுக்கலாமே?

கோவில் உதவியாளர்

கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் SI ராமச்சந்திரன் எடுத்துச் சென்றார்.

நீதிபதிகள்

சம்பந்தப்பட்ட இடத்தில் சாட்சியங்களை சேகரித்தது யார்? அங்கிருந்த ரத்தக்கறைகள், சிறுநீர் அடையாளங்கள் உள்ளதா?

அரசு தரப்பு

அங்கு அப்படி எந்த ரத்தக்கறையும் இல்லை.

நீதிபதிகள்

எஸ்.பி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான். சாட்சிகளை சேகரிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? வழக்கின் சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. அஜித் தாக்க பட்ட இடத்தில் ரத்த கறை ஏன் சேகரிக்க வில்லை?

போலீசார் அஜித்குமாரை தாக்கிய சம்பவத்தை வீடியோ எடுத்தவர் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், வீடியோ எங்கிருந்து எடுத்தீர்கள்? எவ்வளவு நேரம் எடுத்தீர்கள்? என்ன நடந்தது? யார் அங்கு இருந்தார்கள்? என கேள்வி எழுப்பினர்.

வீடியோ எடுத்தவர்

கோயில் பின்புறம் உள்ள கழிவறையில் இருந்து வீடியோ எடுத்தேன். சிறிது நேரம் தான் எடுத்தேன். பயமாக இருந்ததால் உடனே வெளியே வந்து விட்டேன்.

நீதிபதிகள்

காவல் நிலையத்தில் விசாரணை நடக்க வில்லை? அதன் CCTV காட்சிகள் இல்லை. அதே வேளையில் கோயில் CCTV காட்சிகள் எடுத்ததாக, அறிக்கையில் இல்லை. இதை வைத்து குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கி கொடுத்துவிடுவீர்கள்.

அரசு தரப்பு

அரசு உரிய நடவடிக்கை எடுக்கும், அஜித்குமாரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கால அவகாசம் தேவை.

நீதிபதிகள்

காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் மரணித்ததை மறைக்க காவலர்கள் முயற்சித்துள்ளனர்.

அரசு தரப்பு

அரசு அனைவர் மீதும் நடவடிக்கையும் எடுக்கும். உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிபதிகள்

காவலர்கள் கைது கண் துடைப்பு. வருங்காலங்களில் எந்த காவல்துறையினரும் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது. கல்வியறிவு அதிகமுள்ள தமிர்நாடு போன்ற மாநிலத்தில் இது போல நிகழ்வு ஆபத்தானது.

அரசு தரப்பு

எதிர் தரப்பு இதை அரசியல் ஆக்க நினைக்கிறார்கள்.

நீதிபதிகள்

நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதைத்தான் செய்வீர்கள். சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. மிளகாய் பொடி அஜித்தின் பிறப்புறுப்பிலும், வாய், காதுகளில் போடப்பட்டுள்ளது. அஜித்தின் தாயார் அளித்த புகார் தொடர்பாக இதுவரை வழக்கு பதியப்படவில்லை. 50 லட்ச ரூபாய் பாதிக்கப்பட்டவருக்கு தரப்படுவதாக சிலர் பேரம் பேசி உள்ளனர். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக உறுதி அளித்துள்ளனர். அரசு இந்த வழக்கை உணர்வுப்பூர்வமாக எடுத்து நியாயமான விசாரணையை சிபிசிஐடியின் சிறப்புக்குழுவால் நடத்த வேண்டும். சட்டவிரோத மரணத்திற்கு காரணமான உயரதிகாரிகள் முதற்கொண்டு தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சில சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.
விசாரணை அலுவலர் அனைத்து சாட்சியங்களையும் முறையாக சேகரித்ததாக தெரியவில்லை.

அரசு தரப்பு

வழக்கை சிபிஐ க்கு மாற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அரசு இந்த விசயத்தில் நேர்மையாக உள்ளது. யாருக்கும் சாதகமாக இல்லை என்பதை வெளிப்படுத்தவே இதைக்கூறுகிறோம்.

நீதிபதிகள்

மிருகத்தனமாக தாக்கப்பட்டு அஜித்குமார் இறந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை இதுதான் நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது. முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அஜித் உடல்முழுக்க கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவருகிறது. கொலை செய்பவர் கூட இது போல தாக்க மாட்டார். காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை மற்றும் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளார்.

தொடர் லாக்கப் டெத் மரணங்களை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? காவல் நிலையம் மற்றும் கோயில் என வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் அழித்தலும் செய்யக்கூடாது. ஜான் சுந்தர்லால் சுரேஷ் மதுரை மாவட்ட நீதிபதி இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும்.

ஜான் சுந்தர்லால் சுரேஷ் மதுரை மாவட்ட நீதிபதி இந்த விவகாரம் தொடர்பான முழுமையான விசாரணையை தொடங்க வேண்டும். அரசுத்தரப்பில் இதற்கு பொறுப்பான, காரணமான உயரதிகாரிகள் முதற்கொண்டு அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருப்புவனம் காவல் ஆய்வாளர், சிவகங்கை எஸ்.பி, விசாரணை அலுவலர், ஆகியோர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிபதியிடம் நாளை வழங்க வேண்டும்.

Tags :
Advertisement