"2026-ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவதே அதிமுகவின் இலக்கு” - திண்டுக்கல் சீனிவாசன்
2026-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவதே அதிமுகவின் இலக்கு என அதிமுக பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் கடந்த அக். 25ம் தேதி
வங்கியிலிருந்து பசும்பொன்னுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேவர் ஜெயந்தி கடந்த 30ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டதையடுத்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசமானது மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் தங்க கவசத்தை மதுரையில் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:
"பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டது எங்களுக்கு தெரியாது, ஊடகத்தின் வாயிலாக தான் பிரச்னை தெரிய வந்தது. பசும்பொன் வந்த இபிஎஸ்-ற்கு காவல் துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுப்பட்டது போல் பாதுகாப்பு வழங்கப்படாததால் தான் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பவுன்சர்களின் பாதுகாப்புடன் தான் எடப்பாடி பசும்பொன்னிற்கு வந்தார்.
இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் 3-வது முறையாக செந்நிறமாக மாறிய கடல்நீர் – பொதுமக்கள் அச்சம்!
ஓ. பன்னீர்செல்வம் ஏன் இரட்டை வேடம் போடுகிறார் என தெரியவில்லை. இந்த நாடகம் எல்லாம் அதிமுகவிடம் எடுபடாது. ஏற்கனவே அவரிடம் இந்த மாதிரி பல நாடகங்களை பார்த்து உள்ளோம். ஓபிஎஸ்-ன் நாடகத்தை யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் தமிழக முதலமைச்சராக்குவதே அதிமுகவின் இலக்கு”.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.