"பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து அதிமுக வெற்றி பெறும்" - எடப்பாடி பழனிசாமி!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பாண்டமங்கலத்தில் "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" பிரசாரத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டங்களை கொண்டு வந்தோம். பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம். ஏரி, குளங்களை குடிமராமத்துபணி செய்தோம். இது அதிமுகவின் சாதனை. ராஜவாய்க்காலில் ரூ.186 கோடியில் கரைகளை பலப்படுத்த நிதி ஒதுக்கி செயல்படுத்தினோம்.
எஞ்சிய ராஜவாய்க்காலில் தடுப்பு காங்கிரீட் அமைக்கப்படும். பரமத்திவேலூர் காவிரி நீர் சுத்தமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் கோரிக்கையை ஏற்று குடிப்பதற்கு நல்ல தண்ணீர் வழங்கியது அதிமுக அரசு. ஜல்லி, எம்.சாண்ட், சிமெண்ட், கம்பி, செங்கல் மரம் திமுக ஆட்சியில் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.
குப்புச்சிபாளையத்தில் தடுப்பணை, பரமத்தியில் நீதிமன்றம் கட்டி கொடுத்தோம். பரமத்திவேலூர் தாலுக்காவில் கூட்டு குடிநீர் திட்டம் அமைத்து தரப்பட்டது. பிலிக்கல்பாளையம் - கொடுமுடி காவிரி ஆற்றில் தரைமட்ட பாலம் அமைக்கப்படும். திமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை தலைவிரித்தாடுகிறது. அதிமுக ஆட்சியில் போதை பொருள் புழக்கம் முழுமையாக தடுத்து நிறுத்தப்படும். டாஸ்மாக் கடையில் வருடத்திற்கு ரூ.5400 கோடி, கொள்ளை அடிக்கும் ஆட்சிக்கு முடிவு கட்டுவீர்களா?
ஊழலுக்கு அமைக்கப்பட்ட அரசு திமுக அரசாங்கம். பாஜகவிற்கு அதிமுக அடிமை என கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களை போல கொத்தடிமை நானில்லை. இந்த நாட்டை ஆளும் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்தால் என்ன தவறு. திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அந்த கட்சி நல்ல கட்சியா?
இப்போது மட்டும் நல்ல கட்சி இல்லையா? மக்கள் செல்வாக்கை திமுகவினர் இழந்து விட்டார்கள். இன்று கூட்டணியை பார்த்து முதலமைச்சர் பயந்துள்ளார்.
திமுக ஆட்சியை அகற்ற பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து அதிமுக வெற்றி பெறும். விலைவாசி உயர்வை அதிமுக ஆட்சியில் கட்டுக்குள் வைத்திருந்தோம். கொரோனா காலத்தில் கல்வி பயில ஆன்லைன் வகுப்பு, ஆல்பாஸ் போட்டு கொடுத்தோம். *பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்தது அதிமுக அரசு. 98 சதவீதம் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறுகின்றது.
மக்களுக்கு உதவி செய்த கட்சி அதிமுக. 100 நாள் வேலை திட்டத்தில் நிறுத்தப்பட்ட ரூ. 2999 கோடியை முதல்கட்டமாக பெற்று தந்த கட்சி அதிமுக. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்ட்ட திட்டத்திற்கு ரூ. 7,300 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பெற்று 2818 மாணவர்கள் மருத்துவபடிப்பு பயில நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு. ரூ. 350 கோடியில் மருத்துவ கல்லூரி, சட்டக்கல்லூரி, நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வந்தோம். அம்மா மெடிக்கல் கிளினிக் கொண்டு வந்த அதிமுக திட்டத்தை அந்த திட்டத்தை திமுக ரத்து செய்துள்ளோம். அதிமுக ஆட்சியில் மேலும் 4000 அம்மா மெடிக்கல் திறக்கப்படும்.
திமுக எல்எல்ஏவின் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை ரத்து செய்தனர். ஆனால் அவர்களை கைது செய்யவில்லை. திமுக கட்சியை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெறுபவர்கள், நம்பகமான மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு வழக்கில் திமுகவினரை கைது செய்யவில்லை. கரூர் சம்பவம் தொடர்பான ஒரு நபர் கமிசன் மீது நம்பிக்கை இல்லை. அதிமுக ஆட்சியில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு அரசு அதிகாரிகள் வருவார்களா? இது நடக்கிற காரியமா? தேர்தலை மையமாக வைத்து வாக்குகளை பெற ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார், அதை நம்பாதீர்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.