அதிமுக வியூகம் - நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பா...?
அதிமுக இனி ஜெட் வேகத்தில் செல்லும்... தேசியக் கட்சிகளால் எந்த பிரயோஜனமும் இல்லை... மத்திய அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கின்றன... என்கிற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு சொல்லும் செய்தி என்ன? அதற்கு பின்னால் உள்ள அரசியல் வியூகம் என்ன...? விரிவாக பார்க்கலாம்....
கூர்மையாகும் திமுக எதிர்ப்பு
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும் ஒரு முறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும். இதன்படி மட்டுமல்ல, 2024 தேர்தல் வியூகத்தை எடுத்துக்காட்டும் வகையில், டிசம்பர் 26-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தலைவர்களின் பேச்சில் திமுக எதிர்ப்பு வழக்கம் போல் தூக்கலாகவே இருந்தது.
மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை
தொடர்ந்து அவர் பேசுகையில், "பெருமழை, வெள்ளத்தில் மக்களின் பாதிப்பை உணர்ந்து தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியவர், "மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சியில் இருந்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள். மாநில அரசு கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுத்ததாக சரித்திரமே இல்லை. மக்கள் பாதிக்கப்படும்போது உதவ வேண்டியது மத்திய அரசின் கடமை" என்று பொதுவாக பேசினார்.
பிரதமருக்காக கட்சியில்லை - இபிஎஸ்
தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், "அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்றவர், அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள். அதிமுகவைப் பொறுத்தவரை, மக்கள்தான் எஜமானார்கள். மக்களுக்குக்காகத்தான் கட்சி, பிரதமருக்காக அல்ல. அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல், தமிழ்நாட்டு நலனுக்காக ஒலிக்கும்" என்றும் விளக்கம் தந்தார்.
செல்வாக்கில்லாத தேசிய கட்சிகள்
தமிழ்நாட்டைப் பொருத்தவரை மத்தியில் ஆளும் பாஜக, ஆண்ட காங்கிரஸ் உள்ளிட்ட எந்த தேசியக் கட்சியும் தனித்து நின்றால் வெற்றி கிடைப்பதில்லை. மாநிலத்தில் ஆளும் திமுக, ஆண்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தான் ஓன்றிரண்டு இடங்களையாவது பெற முடியும் என்பதே கள யதார்த்தமாக இருக்கிறது. குறிப்பாக, 2009-ம் ஆண்டுக்கு பிறகான காங்கிரஸ் எதிர்ப்பு நிலை, தற்போது பாஜக மீதும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்துதான் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு அமைந்துள்ளது. இதே போன்ற பேச்சே தொடரும் என்றும் சொல்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பா...?
குறிப்பாக காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளையும் எதிர்த்து, தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால், அக்கட்சிக்கான அழைப்பு அல்லது அந்த வாக்கு வங்கிக்கான இலக்காகவும் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சைப் பார்க்கலாம் என்கிறார்கள். 2011-ம் ஆண்டு தேமுதிக கூட்டணி போல், 2024 அல்லது 2026ல் நாம் தமிழர் கூட்டணிக்கான முன் முயற்சி என்கிறார்கள்.
2014 முடிவு 2024ல் கிடைக்கும்?
தலைநகர் சென்னை மற்றும் தென் மாவட்ட பெருமழை, வெள்ள பாதிப்புகள் அதற்கான நிவாரண நிதி பேசு பொருளாகியுள்ளது. மத்திய அரசுக்கு தமிழ்நாடு அதிக வரி உள்ளிட்ட வருவாய் கொடுக்கப்பட்டாலும் தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் நிதிப்பகிர்வு குறைவாகவே கிடைக்கிறது.
பேரிடர் பாதிப்புகளின் போதும் கேட்கும் இழப்பீட்டுத் தொகையில் 5% கூட மத்திய அரசு கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் பரவலாக வைக்கப்படும் நிலையில், அதிமுகவின் நிலைப்பாடு 2024 தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த 2014 தேர்தலில் மோடியா? லேடியா? என்று தனித்து களமிறங்கி அதிமுக 37 இடங்களில் வென்றதையும் நம்பிக்கையோடு சுட்டிக்காட்டுகிறார்கள் அதிமுகவினர்.