For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது!

10:54 AM Dec 26, 2023 IST | Web Editor
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது
Advertisement

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கியது. 

Advertisement

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்கை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும்,  திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா. பெஞ்சமின் மேற்கொண்டார்.  இந்நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற எடப்பாடி பழனிசாமியை வரவேற்று கிராமிய நடனங்கள்,  பூரண கும்பம் மரியாதை  அளிக்கப்பட்டது.  அதோடு நாடாளுமன்ற கட்டடம் போன்ற நுழைவாயிலும் பல்வேறு கட்டவுட்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன. அறுசுவை உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரட்டை தலைமை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை செயல்பட்டு வந்த நிலையில் ஒற்றை தலைமை சர்ச்சை எழுப்பப்பட்டு தற்போது வரை சட்டப் போராட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.  பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பின் நடக்கும் முதல் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் என்பதாலும் இந்த கூட்டம் மிகுந்த கவனம் பெறுகிறது.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் போட்டியிடுவது தொடர்பாகவும்,  வேட்பாளர்களை தேர்வு செய்வது,  தேர்தல் வியூகம் அமைப்பது, அதிமுகவில் இருந்து வெளியேறிய உறுப்பினர்களை மீண்டும் இணைப்பது,  வாக்குச்சாவடி அளவில் தொண்டர்களை களப்பணி ஆற்ற செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும்,  கூட்டணி தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி சமீபத்தில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பு,  எண்ணெய் கசிவு,  தென் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்ட மழை பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு முறையான நிவாரணம் அளிக்கவில்லை எனக் கூறி தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  அதோடு, கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பேசிய பின்னர் இறுதியாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச இருப்பதாகவும் தெரிகிறது.

Tags :
Advertisement