அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை தொடங்கியது!
நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பது தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீடு குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார்.
இக்குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஆலோசனை நடத்தி வருகின்றனர். கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் எந்தெந்தக் கட்சிகளை கூட்டணி பேச்சுவாா்த்தைக்கு அழைக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில், எந்தெந்தக் கட்சிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாம் என்பது தொடர்பாக தொகுதிப் பங்கீட்டு குழுவினர் ஆலோசித்து, அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல, அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை தலைமையிலான தேர்தல் பிரசாரக் குழுவும், அமைப்புச் செயலாளர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தேர்தல் விளம்பரக் குழுவும் அதிமுக அலுவலகத்தில் இன்றைய தினமே தனித்தனியாக ஆலோசனையை தொடங்கியுள்ளன.