தமிழ்நாடு சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் !
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (மார்ச்.14 ) 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் புதிய அறிவிப்புகளை பட்டியலிட்டார்.
இந்த நிலையில், 2025-2026ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சுமார் 1% மணி நேரம் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் வங்கிகளில் வேளாண்மைக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்று விவசாயிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த சட்டசபை கூட்டத் தொடர் 17-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம் பெறும். தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.