கரூர் துயரம் - 8 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார் ஜே.பி.நட்டா
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஹேமமாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளார்.
மேலும் இக்குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புத்த மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு கரூருக்கு விரைவில் வருகை தர உள்ளதாகவும் கரூர் நெரிசலுக்கான காரணத்தை ஆராய உள்ளதாகவும் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.