2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் திமுக இல்லாத நிலையை உருவாக்குவோம் - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் திமுக இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில் அருகே, அதிமுக சார்பில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொள்ளும் பிரச்சார பொதுக்கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.
“இது ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் என்று தான் சொன்னார்கள். ஆனால் இது மாபெரும் வெற்றி மாநாடு என்கிற அளவில் உள்ளது. திருச்சி என்றாலே திருப்பு முனையை ஏற்படுத்தும் இடம். இதே திருச்சியில் மகளிர் மாநாடு நடத்தியபோது மலைக்கோட்டை மஞ்சள் கோட்டையாக தேமுதிகவினர் மாற்றி இருந்தனர். நான் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது.
எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று பேரும் திரைத்துறையில் இருந்து மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள். 2021-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று இருந்தால் தமிழ்நாடு சிறப்பாக இருந்திருக்கும். அதிமுக - தேமுதிக கூட்டணி மீண்டும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி
கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். அவர்கள் மரியாதை மிக்கவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்பவர்கள்.
பெட்ரோல் விலையை குறைப்பேன் என்று சொல்கிறார்கள். தாலிக்கு தங்கம் அனைத்து பெண்களின் ஆசை. ஏன் தங்கத்தை குறைக்கிறேன் என்று சொல்லுங்கள். நன்கொடை என்கிற பெயரில் ரூ.662 கோடி இலவசமாக பெற்ற திமுகவை கண்டிக்கிறோம். இது ஒரு விஞ்ஞான மறைமுக ஊழல். இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெற்றவர்கள் பாஜக. தமிழ்நாட்டில் அதிகம் நன்கொடை பெற்றவர்கள் திமுகவினர். 2026க்கு பின்னர் திமுக தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்”
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.