மதுக்கடையில் கஞ்சா வழக்கில் கைதானவருக்கு அறிவுரை - கல்லால் தாக்கி காவலர் படுகொலை!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர் தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இரவு பணி செய்து விட்டு இன்று(மார்ச்.27) மதியம் பணியை முடித்த பின் வீட்டிற்கு சென்ற முத்துக்குமார், அருகில் உள்ள முத்தையன்பட்டி டாஸ்மார்க் கடையில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு கஞ்சா வழக்கில் சிறை சென்று வந்த பொன்வண்டு என்பவர் ஏற்கெனவே தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அவரிடம் முத்துக்குமார் அறிவுரை சொல்லியதாக கூறப்படுகிறது.
அப்போது பொண்வண்டு உடன் வந்த நண்பர்கள் காவலருடன் வாக்குவாததில் ஈடுபட்டு கல்லால் தாக்கியுள்ளனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். காவலருடன் வந்த அவரது உறவினரான ராஜாராம் என்பவரும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவலர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், முத்துக்குமார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தப்பி ஓடிய கஞ்சா வழக்கில் வெளி வந்த பொன்வண்டு மற்றும் அவருடன் வந்த நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.