For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நீட் குறித்து நடிகர் விஜய் ஆதாரத்துடன் கருத்து கூற வேண்டும்” - அண்ணாமலை!

02:04 PM Jul 04, 2024 IST | Web Editor
“நீட் குறித்து நடிகர் விஜய் ஆதாரத்துடன் கருத்து கூற வேண்டும்”   அண்ணாமலை
Advertisement

“நீட் குறித்து நடிகர் விஜய் அறிவியல்பூர்வமாக ஆதாரத்துடன் புள்ளிவிவரங்களை கையில் வைத்து கொண்டு கருத்து கூறியிருக்க வேண்டும்” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள பாஜக நிர்வாகி இல.கண்ணன் இல்ல திருமண விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அவரது வீட்டிற்கு சென்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து இன்று மாலை கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விக்கிரவாண்டியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இடைத்தேர்தல் என்றாலே எப்போதும் ஆளும் கட்சியுடைய ஆதிக்கம் அதிகம் இருக்கும்.  அதனை நாம் தற்போது விக்கிரவாண்டியில் பார்க்க முடிகிறது. ஒரு இடைத்தேர்தல் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

ஏ டீம் என்ற திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பீ டீமாக இருக்கக்கூடிய அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் இருக்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவால் இதனை மறுபடியும் அவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.

கருத்து சொல்வது அவரவர் சுதந்திரம். அந்தவகையில் விஜய் அவருடைய கருத்தை  சொல்லியிருக்கிறார். கள்ளக்குறிச்சி விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும் என நம்புகிறோம். கள்ளக்குறிச்சியை பொருத்தவரை அது கள்ளச்சாராய கொலை என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆதாரத்தின் அடிப்படையில் நீட் யாருக்கும் எதிரானது அல்ல என்பதனை 2016 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறோம்.

3 முறை திமுக இதுவரை சட்டப்பேரவையில் நீட்டுக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட என்ன பிரச்சனை என்பது தான் என்னுடைய கேள்வி. அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஒரு கருத்து கூறும் போது அறிவியல்பூர்வமாக, ஆதாரத்துடன் அதனை வெளியிடுவது தான் சரியாக இருக்கும். பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக நீட்டை காரணமாக வைத்து வண்டியை ஓட்டி விடுகிறார்கள்.

திமுக எடுக்கும் கொள்கை முடிவை சார்ந்து விஜய் தன்னுடைய அரசியலில் பயணிப்பார் என்றால் தமிழ்நாட்டில் பாஜக மட்டும் தனித்து நிற்கும். பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் மட்டும் தனித்திருக்கும். அது எங்களுக்கு இன்னும் சந்தோசம் தான்.

அரசியல் கட்சித் தலைவராக விஜய் உடைய கருத்தை நான் வரவேற்பேன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு அது நல்லது. புதிய கல்விக் கொள்கை முதலாவது மும்மொழிக் கொள்கையை எடுத்துரைக்கிறது. மும்மொழிக் கொள்கை இல்லை என திமுகக்காரர்கள் யாராவது சொன்னால் அது முற்றிலும் தவறு. 2020 வரை இந்தியாவில் முதல் கல்விக் கொள்கை, இரண்டாவது கல்விக் கொள்கை என இரண்டிலுமே இந்தியை கட்டாயம் என்று தான் வைத்து இருந்தார்கள். ஒருவேளை திமுக அதனை கடைபிடிக்காமல் இருக்கலாம். தமிழ்நாடு அரசு கடைபிடிக்காமல் இருக்கலாம். அது வேறு.

ஆனால் தற்போது கொண்டு வந்துள்ள கல்விக் கொள்கையில் தான் இந்தியை ஆப்ஷனல் என்று தெரிவிக்கிறார்கள். மாநில அரசின் கல்விக் கொள்கையில் கடலோரப் பகுதிகளில் மீன் பிடிப்பது சார்ந்தும் படகுகள் போன்ற பல விஷயங்களை சொல்லிக் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஏன் இது குலக்கல்வி அல்லவா ?  உருது சார்ந்த படிப்பை அதிகம் கொண்டு வர வேண்டும். பள்ளிகளை உருவாக்க வேண்டும் எனக்கூறி இருக்கிறார்கள் இது உருது திணிப்பு இல்லையா? அதிமுகவை பொறுத்தவரை அந்த கட்சி அழிவதற்கு பல பேர் காரணம் என்றால், ஜெயக்குமார் முதல் காரணம்.

காலையிலும் மாலையிலும் லுங்கி கட்டிக் கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பை
வைத்தால் ஜெயக்குமார் அரசியல் செய்துவிட முடியுமா? நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்க வேண்டாம் என விமர்சனம் செய்யும் சு.வெங்கடேசன் மதுரை மேயர் கையில் செங்கோலை எதற்கு வழங்கினார்?

என் மீது மோசமான ஒரு விமர்சனத்தை திமுக ஆர்எஸ் பாரதி வைத்திருந்தார். அவர் மீது நான் வழக்கு தொடுத்திருக்கிறேன். ஒரு கோடி ரூபாய் அபராதம் கேட்டிருக்கிறேன். அதுவும் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக. எனவே இந்த வழக்கை நானே நேரடியாக நீதிமன்றம் சென்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போகிறேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருநெல்வேலி மட்டுமல்ல எல்லா மேயர்களையும் நீக்கிவிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த மேயர் அலுவலகத்திற்கு அழகு சேரும்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement