For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அரசு மருத்துவமனைகளில் நிரந்தர #Dialysis தொழில்நுட்பனர்கள்" - தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

05:25 PM Nov 25, 2024 IST | Web Editor
 அரசு மருத்துவமனைகளில் நிரந்தர  dialysis தொழில்நுட்பனர்கள்    தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு
Advertisement

அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நிரப்ப கோரிய வழக்கில் விரைவில் உரிய முடிவெடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனைகளில் 7 டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களே நிரந்தரமாக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது. அதன் முக்கியத்துவம் கருதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, நீதிமன்றம் தகுதியான டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க கடந்த உத்தரவிட்டது.

இதனையடுத்து, 6 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தரப்பில் டயாலிசிஸ் தொழில் நுட்பனர்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியானது. ஆனால் அவர்கள் தற்காலிக அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 2050 டயாலிசிஸ் கருவிகள், உள்ளன. தற்காலிகமாக பணியாளர்கள் அமர்த்துவதால், ஊதியம் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் வேறு இடங்களுக்கு சென்று விடுகின்றனர்.

பயிற்சி மாணவர்களை பயன்படுத்துவதால், சில நேரங்களில் முறையாக ஊசி செலுத்தப்படாமல் நோயாளிகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். ஆகவே தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர, தகுதியான, போதுமான அளவு டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "மருத்துவ ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 768 இயந்திரங்கள் இருப்பதாகவும் அவற்றில் 690 இயந்திரங்கள் இயங்கும் நிலையில் இருப்பதாகவும், ஒரு மாதத்திற்கு சராசரியாக 5807 நோயாளிகள் டயாலிசிஸ் செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கூடுதலாக டையாலிசிஸ் இயந்திரங்கள் வாங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. டையாலிசிஸ் இயந்திரங்களை இயக்கும் நபர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 10 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 4 ஆண்டுகள் டையாலிசிஸ் படிப்பு வழங்கப்படுகிறது. இந்த கல்லூரி மாணவர்களை பயன்படுத்தும் நிலை உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "வேலைவாய்ப்பு முக்கியமானது. முக்கிய சிகிச்சை பகுதிகளில் நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டனர். அதற்கு அரசுத்தரப்பில், 5 மாத கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், "688 டையாலிசிஸ் இயந்திரங்கள் இருக்கும் நிலையில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் பயிற்சி மாணவர்களைக் கொண்டு அவற்றை கையாண்டு வருவது துரதிஷ்டவசமானது. முக்கிய சிகிச்சை பகுதியான டையாலிசிஸ் பகுதியில், நிரந்தர பணியாளர்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் நிரப்புவது அவசியமானது. இதற்கு 5 மாத கால அவகாசத்தை வழங்க இயலாது. விரைவில் தமிழ்நாடு அரசு உரிய முடிவெடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags :
Advertisement